Monday, January 6, 2014

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி!

Monday, January 06, 2014
சென்னை::மத்திய மந்திரி ஜி.கே. வாசன் இன்று எண்ணூர் துறைமுகத்தில் புதிய ரெயில்வே பாதையை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எண்ணூர் துறைமுகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்வே பாதை ரூ.56.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

தே.மு.தி.க. போன்ற மத சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம், அந்த வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி அமையும்.

தே.மு.தி.க. குறித்து மு.க. அழகிரி கருத்து கூறி இருப்பதாக தெரிவித்தீர்கள். அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் 2004–ம் காங்கிரஸ் கூட்டணி பெற்ற இடங்களை விட 2009-ல் அதிக இடங்களை கைப்பற்றியது. 2014–ம் ஆண்டு தேர்தலில் முன்பு பெற்றதை விட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும்.

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. காங்கிரஸ் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.
 

No comments:

Post a Comment