Thursday, January 30, 2014

நாராயணசாமி வீட்டில் குண்டு வீச்சு மத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை புதுவையில் நாளை மறுநாள் பந்த்!

Thursday, January 30, 2014   
புதுவை::புதுவையில்மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமி வீட்டில் கைப்பற்றப்பட்டது சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டு என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து, பிப்ரவரி 1ம் தேதி புதுச்சேரியில் பந்த் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

புதுவை எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமியின் வீடு முன்பு நேற்று நிறுத்தப்பட்டிருந்த அவரது மகன் காருக்கு அடியில் ஒரு அடி நீளமுள்ள இரும்பு பைப் வெடிகுண்டு நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு அங்கிருந்து அகற்றப்பட்டு, பழைய துறைமுகத்தில் 5 அடி பள்ளம் தோண்டி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தமிழக கமாண்டோ இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஸ்கேனர் கருவி மூலம் ஆய்வு செய்ததில் வெடிமருந்து இருப்பதை உறுதிபடுத்தினர். 500 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் அருகில் சென்று இரும்பு கம்பி உதவியுடன் வெடித்து சிதறிய பொருட்களை ஒவ்வொன்றாக பரிசோதித்தனர். அப்போது அதில் பவர்டெல்&90 எனும் ஸ்சிலரி ஜெல் 1.5  கி வெடிமருந்தும், அதை வெடிக்க வைக்ககூடிய 21 நான்-எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 12 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தன. அதை கைப்பற்றிய கமாண்டோ படையினர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த வெடிகுண்டு சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டு என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது வெடித்திருந்தால் மத்திய இணை
அமைச்சர் வீட்டை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்திற்கு கடும் சேதத்தை விளைவித்திருக்கும். ஆனால் வெடிகுண்டுடன் இணைக்கப்பட்ட 2 திரிகளும் அதிர்ஷ்டவசமாக அணைந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ம்தேதி புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். சீனியர் எஸ்பி சஞ்சீவ் தலைமையில் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும், சென்னையிலிருந்து மத்திய சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குண்டுகளை பார்வையிட அவர்கள் இன்று புதுச்சேரி வருகின்றனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை யும், அதன் வீரியத்தையும் ஆய்வு செய்து திட்டமிட்ட சதியா? என குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment