
Saturday, January 25, 2014
நாகை::இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 51 பேர் உள்பட 71 மீனவர்களும், 15 படகுகளும் இன்று காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அங்கு திரண்டிருந்த மீனவர் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடந்த டிசம்பர் 11ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேரையும், 15 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இதுவரை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் உள்பட மொத்தம் 275 மீனவர்களை விடுவிக்க கோரி நாகை மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக மீனவ பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து பேசினர். அதன்பின், இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் 27ம் தேதி கூட்டம் நடக்கிறது. இந்நிலையில் இலங்கை அரசால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 51 மீனவர்கள், காரைக்கால் மீனவர் ஒருவர், ராமநாதபுரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் என மொத்தம் 71 மீனவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களது 11 படகுகளும் விடுவிக்கப்பட்டன. 71 மீனவர்களும் கடற்படை கப்பலில் அழைத்து வரப்பட்டனர். இலங்கையில் படகுகளின் இன்ஜின் பாகங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் திருடப்பட்டுள்ளன. இதனால் 15 படகுகளில் 3 படகுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருந்தன. அவற்றை மீனவர்கள் ஓட்டி வந்தனர். மற்ற 12 படகுகளை கப்பலில் கட்டி இழுத்து வந்தனர். இந்நிலையில், காரைக்கால் அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்துக்கு மீனவர்கள் படகுகளுடன் வந்து சேர்ந்தனர்.
மீனவர்களை வரவேற்க காலை 7 மணிக்கே வந்து காத்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி, எஸ்பி சிபி சக்கரவர்த்தி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் மீனவர்களை வரவேற்று அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் 5 வேன்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீனவர்களின் வருகைக்காக அவரது குடும்பத்தினர், மீனவர்கள் துறைமுகம் முன்பு காத்திருந்தனர். மீனவர்களை பார்த்ததும் குடும்பத்தினர் அவர்களை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.நாகை மீனவர் 111 பேர் நள்ளிரவு திரும்புவார்கள்இலங்கை அரசு விடுவித்துள்ள அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் மற்றும் இவர்களது 15 படகுகளை இன்று மாலைக்குள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
அதன்பின்னர் அவர்கள் கடற்படை கப்பலில் நாகைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு அல்லது அதிகாலை 111 மீனவர்களும் நாகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த டிசம்பர் 29ல் பாம்பனை சேர்ந்த 18 நாட்டு படகு மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்களையும் இலங்கை போலீசார் நேற்று ஊர் காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மகேந்திரராஜு, 40 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இவர்களது 7 படகுகளும் விடுவிக்கப்பட்டன. விடுதலையான 40 மீனவர்களும் 2 நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment