Friday, January 3, 2014

ஜன. 20 ம் தேதி நடக்கவுள்ள, தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் தர்மசங்கட நிலை ஏற்படும் என, சங்க நிர்வாகிகள்!

Friday, January 03, 2014
ராமேஸ்வரம்::தடை செய்யப்பட்ட, இரட்டைமடி வலையில் சிலர் மீன்பிடிப்பதால், ஜன., 20 ம் தேதி நடக்கவுள்ள, தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் தர்மசங்கட நிலை ஏற்படும் என, சங்க நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனர்.கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி வலைகளில் மீன்பிடிக்க, அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட சில பகுதிகளில், இரட்டை மடி வலையை, சில மீனவர்கள் பயன்படுத்துகின்றனர்.இதனால் தமிழக மீனவர்கள் பாதிப்பதுடன், சீலா, வாவல், வெளமீன், திருக்கை போன்ற அதிக விலை கொண்ட மீன்களை பிடிக்க, எல்லை தாண்டி செல்கின்றனர்; இதில், இலங்கை மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆத்திரமடையும் இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது தாக்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கை சிறையில் வாடும் 271 மீனவர்கள், 78 படகுகளை மீட்கவும், இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிக்க, சென்னையில் ஜன., 20ம் தேதி, இருநாட்டு அதிகாரிகள், மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.தற்போதும், ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர், இரட்டைமடி வலைகளை சீரமைத்து வருகின்றனர். இதை பயன்படுத்தி மீன் பிடிக்கும் போது, இலங்கை மீனவர்கள் கடலில் வைத்துள்ள கூண்டு வலை, தள்ளு வலைகள் சேதமடையும்.தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாவது: தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன்பிடிப்பதால், மீன் வளம் அழிவதுடன், பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைகிறது என, இரு ஆண்டுகளுக்கு முன், இலங்கை மீனவர்கள் தெரிவித்த புகாரின் படி, ஓரளவிற்கு இவ்வலை பயன்பாடு தடுக்கப்பட்டது.

இந்நிலையில் சில படகுகளின் உரிமையாளர்கள், இரட்டைமடி வலையில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர்.இதனால், இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படும். மேலும், இரட்டைமடி வலையில் சிக்கும், பேசாளை மீன்களை லாரியில் ஏற்றி செல்லும் போது, வெளியேறும் கழிவு நீர் விபத்துக்களை ஏற்படுத்துகிறது. எனவே, ஒரு சிலர் லாபத்திற்காக, ஒட்டு மொத்த மீனவர்களும் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment