Thursday, December 19, 2013

தேவயானியை கைது செய்வதற்காகவே திட்டமிட்டு வேலைக்காரி குடும்பத்தை நியூயார்க் கொண்டுசென்ற அமெரிக்கா சதிக்கு துணை போன இந்திய வம்சாவளி வக்கீல்!

Thursday, December 19, 2013
புதுடெல்லி::இந்திய துணை தூதர் தேவயானி கோப்ராகாடே திட்டமிட்டே அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ராகாடே (39). இவருடைய வீட்டில் வேலை பார்த்த சங்கீதா என்ற பெண்ணை, உறவுப்பெண் என்று கூறி அமெரிக்கா அழைத்து வந்ததாகவும், அவருக்கு அமெரிக்க சட்டப்படி முறையான சம்பளம் வழங்கவில்லை என்றும் அந்நாட்டு போலீசார் குற்றம் சாட்டினர். கடந்த 12ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தேவயானியை, பொது இடத்தில் மன்ஹாட்டன் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். விசாரணை அலுவலகத்தில் அவரது ஆடைகளை களைய வைத்து சோதனை நடத்தினர்.
 
போதை மருந்து கடத்தல்காரர்கள் அடைக்கப்பட்ட சிறையில் தள்ளி போலீசார் அவமானப்படுத்தினர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நாடாளுமன்றத்தில் நேற்று பேசுகையில், தேவயானியை மீட்காமல் தான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரப்போவதில்லை என்று சூளுரைத்தார்.இதற்கிடையில் தேவயானியை ஐ.நா.வின் இந்திய நிரந்தர பிரதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இது தூதர் அந்தஸ்துக்குரிய பதவி. இதன் மூலம் அவரை கைது செய்ய அமெரிக்காவால் முடியாது. இந்நிலையில் 2,50,000 டாலர் தொகையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் தேவயானியை திட்டமிட்டே அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
 
தேவயானி வீட்டில் வேலை செய்த சங்கீதா மீது ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில், சங்கீதாவை ஒப்படைக்க கோரி, அமெரிக்க அரசுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவரம் தெரிந்தும், சங்கீதாவை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அதற்கு காரணம், அவர் தங்களுடைய வழக்குக்கு உதவ வேண்டும் என்பதற்காக சங்கீதா கேட்டு கொண்டபடி, அவரது கணவர் பிலிப் மற்றும் 2 குழந்தைகளுக்கு ரகசியமாக விசா வழங்கி, நியூயார்க்குக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
 
சங்கீதாவின் குடும்பத்தினர், நியூயார்க் வந்த பின்னர்தான் அவர், மன்ஹாட்டன் போலீசாரிடம் தைரியமாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் தேவயானி கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், இந்த குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நகர அரசு மூத்த வக்கீல் பிரீத் பஹாரா (இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பல இந்திய தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகி வருகிறார்) மறுத்துள்ளார். இதுகுறித்து பஹாரா பேட்டியில் கூறியதாவது:
 
தேவயானி கைது விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவர் கைது செய்யப்பட்ட போது, கை விலங்கிட்டதாக கூறுவது தவறு. தூதரக விதிகளின்படி முறையாகத்தான் அவர் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்பவர்கள் உயர் பதவியில் இருப்பவர்களா, சாதாரண பிரஜைகளா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பது கிடையாது.பாதிக்கப்பட்ட சங்கீதாவை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். சாட்சிகளை பாதுகாக்க வேண்டியது, அமெரிக்க சட்டத்தில் மிக முக்கியமானது.இவ்வாறு பிரீத் பஹாரா கூறினார்.
 
மன்னிப்பு கேட்டது அமெரிக்கா
 
தேவயானி கைது விஷயத்தில் இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை போனில் தொடர்பு கொண்ட ஜான் கெர்ரி, தேவயானியை போன்று எனக்கும் 2 மகள்கள் உள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதற்கு வருந்துகிறேன். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, வெளிநாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதே அளவு எங்கள் நாட்டில் மற்ற நாட்டு தூதர்களுக்கும் மரியாதை அளிக்க விரும்புகிறோம். தேவயானி விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்து என்றார்.

No comments:

Post a Comment