Wednesday, December 11, 2013

மீனவர்களை காக்க கச்ச தீவை மீட்பது ஒன்றே வழி : ஜெயலலிதா!

Wednesday, December 11, 2013
சென்னை::இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு, கச்ச தீவை மீட்பது ஒன்றே வழி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. இதற்கு தலைமையேற்ற முதல்வர் ஜெயலலிதா, நிகழ்ச்சியில் பேசியதாவது:

இதுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கவும், இனி எதிர்கொள்ள விருக்கும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் இந்த மாநாடு வழி வகுக்கும்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல நல்ல திட்டங்களால் தேசிய அளவில் சிறந்த நிர்வாகம், திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றுக்கான விருதுகளை தமிழகம் தொடர்ந்து வென்று வருகிறது.

தமிழகம், ஜாதி, மத, ரீதியிலான வன்முறைகள் இன்றி அமைதியாக உள்ளது. இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சுதந்திரமாக செயல்படுவதே காரணம். மேலும், இதுபோன்ற வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஒரு விஷயத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாது. தமிழகத்தில் எந்த விதமான வன்முறையையோ, கலவரத்தையோ தூண்டும் விதத்தில் நடந்து கொள்ளும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலில் இருந்து காக்க கச்சத் தீவை மீட்பது ஒன்றே வழி. கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 
கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாட்டை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, 6 மாதங்களுக்கு ஒரு முறை சென்னையில் நடத்தப்படும். இந்த ஆண்டு மாநாடு, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
 
முன்னதாக மாநாட்டுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, பொதுத்துறை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வேன், டிஜிபி ராமானுஜம், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மாநாட்டில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அரசு திட்டங்களின் சாதனைகள் குறித்தும், சட்டம்ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் குறிப்பிட்டார். அதன்பின், மாவட்டம் வாரியாக கலெக்டர்கள், எஸ்பிக்கள் பேசினர். தங்கள் மாவட்ட பிரச்னைகள், தேவைகள் குறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
மேலும், மணல் விற்பனை, டாஸ்மாக் மது விற்பனை, தாது மணல் ஒதுக்கீடு, சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் கலெக்டர்கள் தங்கள் ஆலோசனைகளை எடுத்துரைக்க உள்ளனர். கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள், போலீஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக கூட்டம் நடக்கிறது. அத்துடன் மாநாடு முடிகிறது.

No comments:

Post a Comment