Wednesday, December 18, 2013

ஜெர்மனியின் பிரதமராக 3ம் முறையாக ஏஞ்சலா மெர்கெல் பதவியேற்பு!

Wednesday, December 18, 2013
பெர்லின்::ஜெர்மனியின் பிரதமராக 3ம் முறையாக ஏஞ்சலா மெர்கெல் பதவியேற்றார். ஜெர்மனியின் பிரதமராக 3ம் முறையாக ஏஞ்சலா மெர்கெல் கூட்டணி கட்சிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏஞ்சலாவின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி செப்டம்பர் 22ம் தேதி ஜெர்மனியில் நடைபெற்ற பொது தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
 
ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதி பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து இழுபறி நிலை காணப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஆதரவு தர கோரி தனது எதிர்கட்சியான சோஷலிஸ்ட் கட்சியிடம் நடத்திய மிக நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏஞ்சலாவின் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் கூட்டணியாக ஆட்சி அமைப்பது என்ற முடிவுக்கு சோஷலிஸ்ட் கட்சி வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக பல சுற்றுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையில், கிறிஸ்துவ ஜனநாயக கழகமும், சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்க முடிவானது.இதனைத் தொடர்ந்து ஜெர்மனியின் கீழ் அவையில் இந்த கூட்டணி மொத்தமுள்ள 634 இடங்களில் 504ஐ பெற்று அறுதி பெரும்பான்மையை நிரூபித்தது. பின்னர்
 
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏஞ்சலாவுக்கு ஆதரவாக 462 வாக்குகள் கிடைத்தன. எதிராக 150 வாக்குகள் பதிவாகின. 9 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து 3ம் முறையாக ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்சலா மெர்கல் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். அரிதிலும் அரிதாக 3ம் முறையாக ஜெர்மனியின் பிரதமராக பதவியேற்றுள்ள ஏஞ்சலா மெர்கலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் முதல் பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment