Tuesday 10 December 2013
சென்னை::5 வட மாநில தேர்தல், ஏற்காடு இடைத்தேர்தல் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் தி.மு.க. பொதுக்குழு வருகிற 15–ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த பொதுக் குழுவில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தது. தற்போது தி.மு.க.வுக்கும் – காங்கிரசுக்கும் இடையே இலங்கை பிரச்சினை, 2ஜி அறிக்கை உள்பட ஒரு சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், தி.மு.க. பொதுக்குழுவில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டு அறியப்படுகின்றன.
அகில இந்திய அரசியலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது? ஏற்காடு தேர்தலின் முடிவை தொடர்ந்து உள்ளூர் நிலமை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் கருத்து கேட்கப்படுகிறது.
வட மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினையிலும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் – பா.ஜனதா உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கருணாநிதி கேட்டு இருந்தார்.
ஆனால், ஆதரவு பற்றி எந்த அறிவிப்பையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. பா.ஜனதாவும் மவுனம் சாதித்தது. தி.மு.க. பொதுக் குழுவில் இதுகுறித்து ஆலோசிக்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், கனிமொழி மற்றும் எம்.பி.க்கள் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தமிழக பா.ஜனதாவினர் தி.மு.க. வை விமர்சிப்பதை விட்டு விட்டனர். எனவே, தி.மு.க.வுடன் கூட்டு சேர அவர்கள் தயாராக இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
எனவே காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்வதா? அல்லது பா.ஜனதாவுடன் சேர்வதா? என்பது பற்றியும், பொதுக் குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழுவில் இலங்கை தமிழர்கள், வடமாநில, ஏற்காடு தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து பொதுக் குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டாலும், அதுபற்றி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களின் படியே பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. முடிவு இருக்கும் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment