Friday, November 29, 2013

இலங்கையின் வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்துக்கு இந்தியாவின் உதவி மிக அவசியம்: பிரசாத் காரியவசம்!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதமை குறித்து இலங்கை மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நன்கு தெரிந்திருந்த காரணத்தினால் இந்தியப் பிரதமர் வராதமை குறித்து அந்தளவுக்கு ஏமாற்றம் அடையவில்லை என்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளும் தேசிய தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் பொருளாதார தேவைகளை உள்ளடக்கக்கூடிய வகையில் அரசியல் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உட்பட எங்கள் நட்பு நாடுகளின் நலனுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவுமில்லை என்றும் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்தார். நாம் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஒருமைப்பாட்டுக்காகவே பாடுபடுகின்றோம். தமிழ்நாடு சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து நாம் மன வேதனைப்படுகிறோம் என்று பிரசாத் காரியவசம் எக்கோனமிக் டைம்ஸ் என்ற இந்தியப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தை பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அழிவுகளிலிருந்து காப்பாற்றி அச்சுறுத்தல்கள் அற்ற அமைதியான பிரதேசமாக உருவாக்குவதே இலங்கையின் நோக்கம் என்றும் அவர் கூறினார். இன்று இலங்கையில் வடபகுதியில் ஜனநாயகம் தலைத்தோங்குகிறது என்று தெரிவித்த அவர், வடமாகாணத்தில் சீரான நிர்வாகத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எங்களுக்கு நட்பு நாடான இந்தியாவினதும், தமிழ்நாட்டினதும் ஆதரவு அவசியம் என்று கூறினார்.

No comments:

Post a Comment