Tuesday, November 12, 2013

தமிழ்நாடு முழுவதும் (புலிகளின் ஆதரவு) தமிழ் அமைப்புகள் போராட்டம்!!

Tuesday, November 12, 2013
சென்னை::இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நாளை மறுநாள் தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் மூலம் ராஜபக்சே காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார்.
எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து (புலிகளின் ஆதரவு) கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.

இதற்கும் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே–17 இயக்கம் உள்ளிட்ட 21 அமைப்புகள் சேர்ந்து இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடந்தன.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ம.தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அணி அணியாக வந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 500 பேர் கைதானார்கள்.

இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும், பல்வேறு பகுதிகளிலும் ரெயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பல்வேறு அமைப்புகள்
பங்கேற்றனர். ஒருசில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வைகோ காலை 6.15 மணிக்கு ரெயில் நிலைய மேற்கு வாயில் வழியாக ரெயில் நிலையத்திற்குள் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.

அங்கு சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் போலீஸ் துணை கமிஷனர் தமிழ்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் 300 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி தமுக்கம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் போராட்டம் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 50 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

வேலூர் மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் சுதாகர் ஆகியோர் தலைமையில் காட்பாடியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேலூர் டவுன் ரெயில் நிலையம், திருவண் ணாமலை மாவட்டம் போளூர் ரெயில் நிலையங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5.30 மணியளவில் மதுரை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் பாம்பன் ரெயில் நிலையம் வந்தபோது ம.தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 30–க்கும் மேற்பட்டோர் ரெயிலை மறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே சோத்தூரணி என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 70–க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். சிலர் தண்டவாளத்தில் படுத்தும், ரெயில் என்ஜின் மேல் ஏறியும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண் இளங்கோ தலைமை தாங்கினார். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் மதுரை பாசஞ்சர் ரெயில் 20 நிமிட நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா பகுதிகளில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஊட்டி மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது. உழவர் சந்தைகளும் திறந்திருந்தன. ஆட்டோ, கால்டாக்சிகள் வழக்கம்போல் ஓடுகின்றன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஓட்டல்கள், பேக்கரிகள் அனைத்தும் திறந்திருந்தன. பின்னலாடை நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கோவை மாவட்டத்திலும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பெட்டிக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மூடிக்கிடந்தன. தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை.

கோவையில் ம.தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
போத்தனூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு வந்த பாலக்காடு – திருச்சி ரெயிலை ம.தி.மு.க.வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ம.தி.மு.க. இளைஞர்அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ம.தி.மு.க.வினர் 40பேர் கலந்து கொண்டனர். அவர்களை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் கோவை ரோடு, மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மீரான்சாகிப் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் பாலாஜி, ஆசைத்தம்பி ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், வி.கே.புரம், வீ.கே.புதூர் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தலைமையில் ம.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 500–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முள்ளக்காடு, உடன்குடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கோவில் பட்டியில் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் உள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.

திண்டிவனத்தில் நேரு வீதி, செஞ்சி ரோடு, சென்னை மெயின் ரோடு ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மார்க்கெட் மூடப்பட்டிருந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில ஓட்டல்கள், டீக்கடைகள் திறந்திருந்தன. அரசு பஸ்கள் இயங்கின.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று 40 இடங்களில் போராட்டம் நடந்தது. 16 ரெயில் நிலையங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி ஜங்சன், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், மணப்பாறை, திருவெறும்பூர், மண்ணச்நல்லூர், லால்குடி பகுதிகளில் முற்றுகை போராட்டங்களும் நடந்தன.

திருச்சியில் நடந்த மறியல் மற்றும் போராட்டத்தில் ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., பெரியார் திராவிட கழகம், மார்க்சிய லெனினிஸ்டு, விடுதலை இயக்கம், தமிழக விடுதலை இயக்கம், விடுதலை புயல், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 21 அமைப்புகள் பங்கேற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பகுதி உட்பட சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
குமரி மாவட்டத்தில் இன்று பஸ்கள், ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் வழக்கம் போல ஓடின. திருவட்டார் மற்றும் ஒரு சில இடங்களில் குறைந்த அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் தலைமையில் ரெயில் மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் கறுப்பு கொடி ஏந்தியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சையில் இன்று சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, பந்தநல்லூர், நாச்சியார் கோவில், திருபுவனம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

கும்பகோணத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் இன்று அனைத்து கடைகளும் திறந்து இருந்தது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. நீடாமங்கலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்கும் போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் காந்திஜி ரோடு, கச்சேரி ரோடு, கடைவீதி, ரெயிலடி பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை நாமக்கல் ரெயில் நிலையத்தில் ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் டி.என்.குருசாமி தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல மனிதநேய மக்கள் கட்சியினர் நாமக்கல் ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலுக்கு முயன்றபோது 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெய்வேலி மந்தாரக் குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலையில் மந்தாரக்குப்பம் ரெயில் நிலையம் நோக்கி அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு அந்த இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி ரெயில் மறியலுக்கு முயன்றனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment