Friday, November 29, 2013

சனல் 4 தொலைக்காட்சி இஸ்ரேலின் கொடுமைகளுக்குள் சிக்கியிருக்கும் காஸாவுக்குச் செல்லாதது ஏன் ? தயான் ஜயதிலக்க!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து குரல் கொடுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் சனல் 4 தொலைக்காட்சியும் 65 வருடங்களாக இஸ்ரேலின் கொடுமைகளுக்குள் சிக்கியிருக்கும் காஸாவுக்குச் செல்லாதது ஏன் என  முன்னாள் ஜக்கிய நாடுகள் தூதுவரும் எழுத்தாளரும், சோசலிசவாதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க கேள்வியெழுப்பினார்.
 
ஜக்கிய நாடுகள் அமையத்தின்  பலஸ்தீன சர்வதேச ஒருமைப்பாட்டு தினம் நேற்று மாலை கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 
 
இந் நிகழ்வுக்கு பலஸ்தீன் - இலங்கை நட்புறவு அமைப்பின் இணைத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின ஆகியோர் தலைமை வகித்தனர்.
 
பிரதம அதிதிகளாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண,  பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல்-அக்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இலங்கையில் உள்ள சுமார் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதுவர்களும் இந் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.
 
பிரதான உரையை கலாநிதி தயான் ஜயதிலக்க ஆற்றினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அண்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் கெமரூன் எவ்வித அனுமதியுமின்றி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அங்கு யுத்தம் நடைபெற்ற இடங்கள் பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் உறவினர்களை இழந்த தாய்மார்களையெல்லாம்  சந்தித்து விட்டு கொழும்பு வந்தார். 
 
கொழும்பில் தன்னிச்சையான ஊடகவியாளர் மாநாட்டை கூட்டி இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால்  கடந்த 65 வருடங்களாக பலஸ்தீன முஸ்லிம்கள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.  அமெரிக்காக பிரித்தானியா போன்ற நாடுகளே  ஆரம்பத்தில்  இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பலஸ்தீன மக்களை பச்சை பச்சையாக கொலை செய்ய உதவினர். 
 
பலஸ்தீனத்தில்  சிறுபிள்ளைகளையும் வயோதிபர்களையும் பெண்களையும் கொலைசெய்கின்றனர். அவர்களது அடிப்படைத் தேவைகளான நீர் வழங்கல் மற்றும் பாதைகளையும் கட்டிடங்களையும் குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். 
 
 உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமை மீறல்களை கடந்த 65 வருடங்களாக   இஸ்ரேல் பலஸ்தீனத்தில் கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது. இலங்கையின் வடக்கை விட பன்மடங்கு கொடுர சம்பவங்கள் பலஸ்தீனத்தில் நடைபெறுகின்றன. ஆனால் கெமரூன்  காஸாவுக்குச் சென்று பார்க்கவில்லை. ஏன் அவர் இஸ்ரேவேலுக்கு அல்லது யூதர்களுக்காக எதிராக மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லையென நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.
 
 அதேபோன்று பி.பி.சி., சனல் 4 தொலைக்காட்சிகள் ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை எனவும் தயான் கேள்வி எழுப்பினார். 
 
இந் நிகழ்வில் பலஸ்தீனில் இஸ்ரேல் புரியும் அட்டூழியங்களைக் காட்சிப்படுத்தும் புகைப்படக் கண் காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment