Monday, October 14, 2013

தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் மீது தி.மு.க., "திடீர் பாசம்!!

Monday, October,14, 2013
சென்னை::தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, புது தந்திரத்தை கையில் எடுத்துள்ள, தி.மு.க., தலைமை, தேர்தல் நிதி வசூலிப்பில் திணறி வரும், அக்கட்சி மாவட்ட செயலர்களுக்கு உதவி செய்து, பாசம் காட்டி' வளைக்க காய் நகர்த்தி வருகிறது.

தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தல் நிதி வசூலிப்பு தொடர்பாக, மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்தது. மாதம், 50 லட்சம் ரூபாய் வீதம், மூன்று மாதத்திற்கு, 1.50 கோடி ரூபாய், தேர்தல் நிதியாக வசூலித்து தரவேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக, கட்சி தலைமையால் அச்சிடப்பட்ட, தேர்தல் நிதி வசூலிப்பு, நன்கொடை புத்தகங்கள், மாவட்ட செயலர் களுக்கு வழங்கப்பட்டது. தனியாக நன்கொடை புத்தகம் அச்சடித்து, மாவட்ட நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்க, மாநில நிர்வாகிகள் இருவர் தலைமையில் கண்காணிப்பு குழுவையும், தே.மு.தி.க., தலைமை அமைத்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வசூலிக்கும் தொகையை, வாரம்தோறும், இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர்களுக்கு கீழ் உள்ள மாவட்ட நிர்வாகிகள், வட்டம், நகரம், பேரூராட்சி, ஒன்றிய செயலர்கள், நன்கொடை வசூலிப்பிற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். மாவட்ட செயலர்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி, பலர் தங்கள் மொபைல் போன் எண்களை, சூஸ்விட்ச் ஆப்' செய்து வைத்துள்ளனர். பலர் தங்கள் தொடர்பு எண்களையும் புதிதாக மாற்றியுள்ளனர். இதனால், கட்சி தலைமைக்கு பதில் சொல்ல முடியாமல், மாவட்ட செயலர்கள் திணறி வருகின்றனர்.

இந்த சூழலில், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க., தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, ராஜ்யசபா தேர்தலுக்கு முன், தே.மு.தி.க.,வை வளைக்க பல்வேறு ரகசிய பேரங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதற்கு தே.மு.தி.க., தலைமை பிடிகொடுக்கவில்லை. மேலும், ராஜ்யசபா தேர்தலில் வேட் பாளரை நிறுத்தி, தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடியை அக்கட்சி கொடுத்தது. இதனால், காங்.,கிடம் கெஞ்சி, ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு பெற வேண்டிய நிலை, தி.மு.க.,விற்கு ஏற்பட்டது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அதனை தி.மு.க., புறக்கணிக்கும் என கூறப்பட்டது. ஆனால், விருப்ப மனு பெற்று, நேர்காணல் நடத்தி, வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

மற்ற எதிர்கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அ.தி.மு.க.,விற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தவும், அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு, தி.மு.க., தலைவர் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலிலேயே லோக்சபா தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் என தி.மு.க., விரும்புவதே இதற்கு முக்கிய காரணம். தே.மு.தி.க., தலைமையில், புதிய கூட்டணி அமையாமல் தடுப்பதற்கே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்காடு தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க., முழுவீச்சில் தயாராகி வருவதை அறிந்த, தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை வளைக்க புது யுக்தியை கையாள துவங்கியுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டு, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப் போவதாக கூறி வருகிறார். இதற்காக, விரைவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், மாவட்ட செயலர்களின் மனநிலையைத்தான், மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரதிபலிப்பர் என, தி.மு.க., கணித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு, தே.மு.தி.க.,வின், 59 மாவட்ட செயலர்களை வளைக்க, தி.மு.க., தலைமை காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.

தற்போது, தேர்தல் நிதி வசூலிக்க முடியாமல், தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் திணறி வருகின்றனர். அவர்களுக்கு உதவும்படி, தி.மு.க., முக்கியப் புள்ளிகள் மற்றும் அக்கட்சி தொழிலதிபர்களுக்கு ரகசிய, உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நிதி வழங்கி, பாசம் காட்டி மாவட்ட செயலர்களை வளைத்துவிட்டால், அதன்மூலம் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே, இந்நடவடிக்கையை தி.மு.க., தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., தலைமை மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதற்கான விடை, விரைவில் தெரியும்.

No comments:

Post a Comment