Thursday, October 31, 2013

பயமுறுத்தும் பணவீக்கத்தால் காத்திருக்கு அபாயம்: இந்தியா - சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 'திடுக்'!!

Thursday, October 31, 2013
சென்னை::இந்தியா, சீனாவைச் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிப்பதற்கு திட்டமிடுவதில்லை. பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில், நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்யாமல், குறுகிய கால திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இது, சர்வதேச தொழில் சேவை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஓய்வு பெற ஆசை:

 பொருளாதார வளர்ச்சியில், இந்தியா - சீனா இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், இரு நாடுகளிலும் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழிலாளர்கள், தங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை சேமிப்பதில், போதிய கவனம் செலுத்தாமல் உள்ளனர். அன்றாட வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஓய்வு காலத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதலீடுகளை அமைத்து கொள்வதில், ஊழியர்கள் திட்டமிடுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, 'டவர்ஸ் வாட்சன்' நிறுவனம், இந்தியா, சீனாவில், நகர்ப்புறங்களில் அமைந்துள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து, ஒன்றிரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. பல நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம், முதலீடு செய்யும் பழக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து, ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரம் வருமாறு:

* சீனாவில், 90 சதவீதத்தினரும், இந்தியாவில், 80 சதவீதத்தினரும், 60 வயதுக்குள் அல்லது அதற்கும் குறைவாக ஓய்வு பெறலாம் என, எதிர்பார்க்கின்றனர். இதற்கு பின், தங்களின் வாங்கும் திறன் குறையும் என, கருதுகின்றனர்.

* இந்தியாவை பொறுத்தமட்டில், பெரும்பாலானவர்களின் முதலீடு, தங்கம் மற்றும் வெள்ளியில் தான் உள்ளது. 41 சதவீதம் பேர், முதலீடு என்ற பெயரில், நகைகளை வாங்குகின்றனர்.

* சீனாவில் பெரும்பாலானவர்களின் முதலீடு வங்கி டெபாசிட்டாக உள்ளது. 83 சதவீதத்தினர், வங்கிகளில் டெபாசிட் செய்வதை பாதுகாப்பாக நினைக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக, மியூச்சுவல் பண்ட், பென்ஷன் திட்டங்கள், இன்சூரன்ஸ், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

* மேற்கொள்ளப்படும் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தின் தாக்கத்திற்கு ஏற்ப, ஓய்வு காலத்தில் மறைந்துள்ள, சவால்களை ஈடுகட்டும் வகையில் இல்லை.

* வீட்டு வசதி, குழந்தைகளின் எதிர்கால தேவைகளை சமாளிப்பது சவாலாக இருக்கும் என, 75 சதவீதம் பேர் ஒப்புக் கொள்கின்றனர்.

* இந்த ஆய்வு, இந்தியாவில், 2,440 பேரிடமும், சீனாவில், 2,261 பேரிடமும் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும்பகுதியினரின் சராசரி வயது, 33.

* ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் பணவீக்கம், ஓய்வு பெறும் காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதலீடுகளை அமைத்து கொள்ளாமல், குறுகிய கால முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர்.

விழிப்புணர்வு தேவை

* ஓய்வு காலத்தை திட்டமிடுவதற்கு தயார்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் அவசியம் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வு கால பலன் அளிக்கும் திட்டங்களை, கட்டாயமாக்குவது அவசியமாகும்.

* தேசிய பென்ஷன் திட்டம் ஊழியர்களை கவர்வதாக உள்ளது.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment