Wednesday, October 23, 2013
ஜம்மு::பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 200–க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் தினமும் இரவு பீரங்கித் தாக்குதல், ராக்கெட் வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், எல்லையோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறியுள்ளனர்.
இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுபற்றி காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, மத்திய மந்திரி சுசீல் குமார் ஷிண்டே இரு வரும் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்கள்.
இதையடுத்து எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உத்தர விடப்பட்டது. ஆனால் மறு நாளே பாகிஸ்தான் ராணுவம் சுமார் 50 இடங்களில் தாக்குதல்களை நடத்தி சவால் விட்டது.
நேற்றிரவு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுட்டது. இந்திய வீரர்கள் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 4 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 4 மணி நேரம் 15 நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர்.
இந்திய ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்தி வரும் தொடர் அட்டூழியத்தால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சமீப காலங்களில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
என்றாலும் மத்திய அரசு வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமைதியாகி விடுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.





No comments:
Post a Comment