Wednesday, October, 16, 2013
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 1500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 400 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். நேற்று முன் தினம் வழக்கம்போல் கடலுக்கு சென்ற அவர்களில் 15 மீனவர்கள் மட்டும் நேற்று காலை கரை திரும்பவில்லை.
இதற்கிடையே இந்திய கடல் எல்லையான பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த தேசிங்கு (வயது 35), ஆறுமுகம் (55), அவரது மகன் சதீஷ் (20), செல்வராஜ் (30), அய்யப்பன் (40), மணிகண்டன் (26), வினீத் (18), மணி (50), கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபால் (40), ஜெய்னுலாப்தீன் (52), மாரியப்பன் (55), சீனியப்பன் (32), பாண்டி (22) மாரிமுத்து (32) மணி (24) ஆகிய 15 பேரையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காரை நகர் முகாமில் வைத்து விசாரணைக்கு பின்னர் அவர்கள் 15 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த மாதம் (செப்டம்பர்) 19–ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்களை சிங்கள கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்களின் காவலை வருகிற 28–ந்தேதி நீட்டித்து அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 15 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவ சங்கங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகுகளையும் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து இன்று யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment