வாஷிங்டன்::பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்துள்ளது. பாகிஸ்தானிடம் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் தங்கி இருந்த பின்லேடனை அமெரிக்கா கொன்றதை அடுத்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.
மேலும் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தவறுதலாக ராணுவ வீரர்கள் முகாம் மீது விழுந்தது. இதில் 27 வீரர்கள் இறந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் உள்ள உறவு முறிந்தது. எனவே பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நவாஸ் ஷெரீப் பிரதமரானார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா_பாகிஸ்தான் இடையே மீண்டும் நட்புறவு ஏற்பட்டது.
எனவே தங்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு அமெரிக்காவிடம், பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதை பரிசீலித்த அமெரிக்க பாராளுமன்றம், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்தது. எனவே பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அதற்கு முன்னதாகவே பாகிஸ்தானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment