Wednesday, September 4, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசாரணை நடத்த வேண்டும்: ஏ. எச். எம். அஸ்வர்!

Wednesday, September 04, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசாரணை நடத்த வேண்டுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இலங்கை வந்து சென்றிருக்கும் நவநீதம்பிள்ளை பக்கச் சார்பாக செயற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத் திருத்தம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழான கட்டளை திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
தொடர்ந்தும் உரையாற்றிய ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. :-
 
இலங்கைக்கு வந்த நவநீதம் பிள்ளைக்கு காத்தான்குடி, அறந்தலாவ, அனிஞ்சிப் பொத்தானை ஆகிய இடங்களுக்குச் சென்று புலிகளால் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளைப் பார்வையிட்ட பாதை தெரியவில்லையா? வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பற்றி அவர் கவனம் செலுத்தவில்லை. புலிகள் மோசமான பயங்கரவாத அமைப்பு என்று நவநீதம்பிள்ளை தற்பொழுது கூறினாலும் புலிகளின் மாவீரர் நிகழ்வில் அவர் மலர்வளையம் வைத்துள்ளார்.
 
இவ்வாறு பக்கச் சார்பான முறையில் செயற்படும் இவர் எவ்வாறு இலங்கை தொடர்பில் பக்கச் சார்பற்ற அறிக்கையை முன்வைப்பார்.
இவரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டுக்கொள்கிறேன். நவநீதம்பிள்ளை இன்னும் சிறுபிள்ளை அல்ல. வளர்ந்தவர் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
 
வடக்கில் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கையானது ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திகள் தொடர்பில் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் பலர் அறிந்துள்ளனர். பலர் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப விருக்கின்றனர்.
 
தற்பொழுது ‘டயஸ்போரா’ இல்லை. அரசு முன்னெடுத்திருக்கும் அபிவிருத்திகளை அவர்கள் ஏற்றுள்ளனர்.
 
அதேநேரம், வடக்கில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் வீதி மற்றும் புகையிரத பாதை அமைப்புக்கள் சிங்கள மக்களை வடக்கிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி. வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இவர் முற்றுமுழுதாக இனவாதக் கருத்தை வெளிளிட்டுள்ளார்.
 
அவருக்கு அரசியல் வராது. தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment