Wednesday, September 18, 2013

சென்னை-கன்னியாகுமரி வரை கடலோர ரோந்து பணி தீவிரம்: சைலேந்திரபாபு பேட்டி!

Wednesday, September 18, 2013
வேதாரண்யம்::வேதாரண்யத்தில் கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்க்கொண்டார். வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் கடந்த மாதம் 17ம் தேதி மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் தீவிரவாதிகள் ஊருடுவினார்களா அல்லது தங்கம் கடத்தப்பட்டதா?

என்று போலீசார் விசாரித்து வரும் நிலையில் கடந்த 12-ந் தேதி இலங்கை யாழ்பாணத்திலிருந்து படகை திருடி மீனவர்கள் நிரஞ்சன், சிந்தாதுரை ஆகிய இருவரும் கோடியக்கரை மணவாய்க்கால் அருகே கரை சேர்ந்தனர். மீனவர்களின் தகவலின் பேரில் அவர்களை சுங்கத் துறையினர் பிடித்து கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் இந்த இரு மீனவர்களும் மதுரை முகாமில் உள்ள தங்கள் உறவினரை பார்க்க வந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்க்கொண்டார்.

சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்து பின்பு கோடியக்கரையில் சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று இலங்கையிலிருந்து படகில் வந்தவர்கள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு இது குறித்து கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:-

கோடியக்கரையில் சுங்கத்துறையினர் கடந்த 13ம் தேதி இரண்டு இலங்கை மீனவர்களை பிடித்து உள்ளனர். அவர்கள் மதுரையில் உள்ள உறவினரை பார்க்க வந்துள்ளனர். கடந்த மாதம் ஒதுங்கிய படகு கயிறு அறுந்து ஒதுங்கிய படகாகும். தற்போது கடலோர காவல்படைக்கு 12 காவல் நிலையங்கள் உள்ளது.

கூடுதலாக தற்போது 35 காவல் நிலையங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. ரோந்து பணிக்கு 24 படகுகள் உள்ளன. தற்போது கூடுதலாக 14 படகுகள் வந்துள்ளது. தமிழகத்தில் 1800கி.மீ. கடற்பரப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை கடலோர காவல் படையினரால் 121 மீனவர்களையும், 22 படகுகளையும் மீட்கப்பட்டு உள்ளது. கடலில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மீனவர்கள் உதவிக்கு 1093 என்ற எண்ணை அழைக்கலாம்.

ஆபத்தான நேரங்களில் மீனவர்கள் சரியான தகவல் அளித்தால் இந்தியன் கோஸ்ட் கார்ட், ஹெலிகாப்டர், கப்பல் மூலம் மீட்கலாம். சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வேதாரண்யம் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் கந்தவேல், பட்டுகோட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கோடியக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தராஜா, சிவபூஜன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment