Wednesday, September 18, 2013
இலங்கை::சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தத்தை பிரயோகிப்பதற்கும் உள்நாட்டில் பிரச்சினையை உருவாக்குவதற்குமான பின்னணியில் புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர் அமைப்புக்களே காணப்படுகின்றனவென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்துக்கென ஏராளமான பணத்தை சேகரித்து குவித்து வைத்திருக்கும் மேற்படி டயஸ்போரா அமைப்புக்கள் யுத்தமின்மையினால் சர்வதேச நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக அந்தப் பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
பணப்பலம் காரணமாக சர்வதேச ஊடகங்களையும் புலம்பெயர் அமைப்புக்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. இவர்களது உத்வேகத்தை மையமாக வைத்தே சர்வதேச நாடுகள் இலங்கைக்கெதிரான சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனவென சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், இதற்கு ஒருபோதும் இடமளிக்காத வகையில் எமது ஜனாதிபதியவர்களின் தலைமைத்துவத்தை உறுதிபடுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
எமது நாடு சர்வதேசத்திற்கு விலை போவதை தடுத்து நிறுத்தும் முகமாக நாட்டு மக்கள் ஒன்றுகூடி ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும் செயன்முறை யினை நாம் அரசியல் பிரதிபலிப்பாகவே கருதுகின்றோம். இது எமது தாய்நாட்டி ற்காக நாம் செய்யும் அர்ப்பணிப்பு எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று (17) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதம், கலவரமுள்ள எந்தவொரு நாட்டினதும் பின்னணியில் சர்வதேச நாடுகளின் அழுத்தம் இருப்பது கண்கூடாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் இலங்கையிலும் பிரச்சினையை தோற்றுவிப்பதில் சர்வதேசம் பாரிய பங்கினை வகிக்கின்றது.
இலங்கையுடன் வர்த்தக ரீதியான உறவினை வைத்திருக்கும் பல நாடுகளில் சர்வதேச நாடுகள் கலவரத்தை உண்டுபண்ணி, விமானத்தில் வந்து குண்டுகள் இட்டு, நாட்டுத் தலைவரையே தூக்கிச் சென்றதனை நாம் அறிந்துள்ளோம். அப்படியானதொரு நிலை இலங்கைக்கு வர நாம் இடமளிக்கக் கூடாது.
தேசப்பற்றுள்ள மக்கள் நம் நாட்டில் இருக்கும் வரை அவ்வாறான செயற்பாடுகள் இலங்கைக்கு நிகழாது என்பதற்காக நாம் அலட்சியப் போக்குடன் செயற்படக் கூடாது எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
ஏனைய நாடுகளில் சர்வதேசத் தலையீட்டினால் இடம்பெற்றுள்ள அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு எமது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகுமெனவும் அவர் கூறினார். இலங்கையில் ஏராளமான வளங்கள் காணப்படுகின்றன. பூகோள ரீதியாக இதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாகவே சர்வதேச நாடுகள் எம் நாட்டின் மீது அதீத அக்கறை காட்டி வருகின்றனர். நாட்டிற்குள் சிறியதொரு பிரச்சினை, முருகல் நிலை தோன்றினாலே போதும். அதனை சாக்காக வைத்து நாட்டிற்குள் தலையிடுவதற்காக இவர்கள் காத்துக் கிடப்பார்கள். அது தான் அந்த நாடுகளினது இயல்பு. அதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்காத வகையில் நாம் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார்.
அதற்குரிய ஒரே தீர்வு எமது நாட்டுத் தலைவரின் ஆட்சியினை மேலும் வலுப்படுத்துவதாகும். பயங்கரவாதத்தை ஒழித்ததனால் எமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியை நாம் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். தேர்தலில் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலம் அவரது ஆட்சிக்கும் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறானதொரு நிலை உருவாகும் போது நாட்டு மக்கள் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு எமக்கெதிராக சதி செய்யும் நாடுகள் தாமாகவே பின்விலக ஆரம்பிப்பார்கள்.
இதனால் பிற நாடுகளுக்கு ஏற்பட்ட துரதிஷ்ட நிலைமை எமக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் கூறினார்.புலிகள் ஒழிக்கப்பட்டு கடந்த நான்கு வருட காலப்பகுதிக்குள் நாட்டிற்குள் எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இதனால் எமது நாட்டிற்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளும் இந்து சமுத்திரமும் கூட பல நன்மைகளைப் பெற்றிருப்பதாக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அண்மையில் என்னிடம் கூறியிருந்தனர்.
இந்த வெற்றி தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாயின் ஜனாதிபதியவர்களது ஆட்சி மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆறுமாத காலத்திற்கொரு தடவை தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப் படும் ஒரே நாடு இலங்கை மாத்திரமேயாகும். இதில் ஆளும் கட்சிகளே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைவது மக்கள் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.



No comments:
Post a Comment