Saturday, September 7, 2013

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற "ஸ்டிரைக்'!

Saturday, September 07, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி, இன்று முதல், ராமேஸ்வரம் மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமேஸ்வரத்தில், விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் தேவதாஸ் தலைமையில், நேற்று நடந்தது. இலங்கையில் சிறையில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள், 76 பேர் உட்பட, தமிழக மீனவர்கள், 146 பேரை விடுவிக்க கோரி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும், இதற்கு நாகை, புதுக்கோட்டை மீனவர்களிடம் ஆதரவு திரட்டுவது எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஜூலை 6, ஆக., 3ல், ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற, 41 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். மன்னார் கோர்ட்டில், நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, செப்., 20ம் தேதி வரை, சிறையில் அடைக்க, நீதிபதி ஆனந்தி கனகராஜ் உத்தரவிட்டார். தமிழக மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment