Thursday, September 26, 2013
இலங்கை::மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (புலிகள் ஆதரவு அறிக்கை) ஆணையாளர் நவனீதம்பிள்ளை காலக்கெடு விதித்துள்ளார்.
எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக மனித உரிமை பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவிற்குள் இலங்கை அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறினால் சர்வதேச சமூகம் சுயாதீன விசாரணைகளை நடத்தி தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்களுக்கு காத்திரமான முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணும் எந்தவொரு புதிய முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் எடுத்ததாகத் தோன்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்க எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உரிய முறையில் விசாரணை நடத்தப்படாவிட்டால், சர்வதேச சமூகம் சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான வாய்மொழி மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதி ஆணையாளர் ப்ளாவியா பென்சிறி சமர்ப்பித்துள்ளார்.
ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் அறிக்கையை நேரடியாக சமர்ப்பிக்க முடியாமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்து ஒத்துழைப்பை வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் வடக்கில் கூடுதல் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த வலய பெண்கள் படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
வடக்கின் பல பகுதிகளில் பொதுமக்கள் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் நடவடிக்கைகள் வரையறுக்க்பபட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை திணைக்களத்தின் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு மாற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சிறுபான்மை இன மதங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் போன்ற காரணிகள் குறத்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுயாதீன ஆணைக்குழுக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது தம்மை சந்தித்தவர்களை இராணுவத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



No comments:
Post a Comment