Saturday, September 21, 2013

வாக்காளர் அட்டை விநியோகத்தில் முறைகேடு தபால் ஊழியர் ஒருவர் கைது!

Saturday, September 21, 2013
இலங்கை::வவுனியாவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தில் ஒரு முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், தபால் ஊழியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
 
எவ்வாறாயினும் குறித்த வாக்காளர் அட்டைகள் பின்னர் உரிய வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தபால் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 141 பேர் இதுவரை கைது!
 
தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 141 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 189 முறைபாடுகள் பொலிஸாருக்கு பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவிக்கின்றார்.
 
இவற்றுள் அதிகமான முறைபாடுகள் மத்திய மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த மாகாணத்தில் 84 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
தேர்தல் பாதுகாப்பு கடமைகளின் பொருட்டு 24 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment