Saturday, September 28, 2013

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவு தேவைப்படுவதாக, நியூசிலாந்து தெரிவித்துள்ளது!

Saturday, September 28, 2013
இலங்கை::நியூசிலாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவு தேவைப்படுவதாக, நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
 
2015 -  2016ம் ஆண்டு காலப்பகுதிக்கான சுழற்சி முறைமை பாதுகாப்புப் பேரவை உறுப்புரிமைக்காக நியூசிலாந்து போட்டியிடுகின்றது.
 
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகின் முக்கிய தலைவர்கள் நியூயோர்க்கில் கூடியுள்ளனர்.
 
எந்த நாட்டுக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும், நியூசிலாந்தின் கோரிக்கை நிச்சயம் கவனத்திற் கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பாலுற்பத்தி வர்த்தகம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூசிலாந்து பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment