Wednesday, September 4, 2013

மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு மற்றும் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தி முன்வைத்த 16 விடயங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Wednesday, September 04, 2013
இலங்கை::மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு மற்றும் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தி முன்வைத்த  16 விடயங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் காணப்படும் விடயங்கள் பொய்யானது என இலங்கை வெளிவிவகார அமைச்சர்  லண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
அவர் முன்வைத்துள்ள விடயங்கள் அவரது சுயாதீனமான கண்காணிப்பின் அடிப்படையிலானது அல்ல. எனவும் இலங்கையின் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகளுக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக திவயின கூறியுள்ளது.
 
மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து கண்காணிப்பதற்காக இலங்கை வந்த அவர், தனது அதிகாரத்தை மீறி இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு விடயங்களில் தலையிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
 
நவநீதம்பிள்ளை இந்த விடயங்கள் சம்பந்தமாக எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் வாய்மூலமான அறிக்கையை சமர்பிக்க உள்ளார். அவரது இந்த அறிக்கை சுயாதீனமான ஒன்றாக இருக்காது என இலங்கை அரச தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். புலிகளின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்வதையும் நவநீதம்பிள்ளை குற்றம் என தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
 
அதேவேளை 2005 ஆம் ஆண்டு முதல் 30 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணையாளருக்கு பொய்யான அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment