Tuesday, August 13, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
வரலாறு தொட்டே இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான தீர்வொன்றே அவசியமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது நினைவு தின நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் எனவும் இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தியவர் அவரே எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கை பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டு தீர்வாக அமைய வேண்டுமே தவிர வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தீர்வுகளாக முடியாது எனவும் தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது வருட நினைவு தினத்தையொட்டி லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கை நெறிகளுக்கான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னாரது உருவச் சிலை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, தினேஷ் குணவர்தன, திஸ்ஸவிதாரண, ஏ.எச்.எம். பெளஸி உட்பட அமைச்சர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், சஜின்வாஸ் குணவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையின் முதலாவது தமிழ் வெளிவிவகார அமைச்சர் என்ற பெருமை பெற்றவர். தமிழ் கலாசாரத்தை நேசித்ததோடு அனைத்து கலாசாரங்களையும் மதித்துச் செயற்பட்டவார்.
சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பில் உலகில், கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அவர், இதனைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியில் முன்னின்று செயற்வட்டவராவர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற போர்வையில் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் பங்குபற்றவில்லை. வேறு உள்நோக்கங்களை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுவதற்காகவே வெறுமனே பேச்சுவார்த்தைகளில் முகங்களைக் காட்டினர்.
இதனை அமைச்சர் கதிர்காமர் புரிந்து கொண்டார். இதனாலேயே அவர் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இலங்கையின் உண்மை நிலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்ற கதிர்காமர் அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றிலும் புலிகளைத் தடை செய்வது தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் இலங்கைக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தியல்ல என்பதை வலியுறுத்தியுள்ள அவர் சர்வதேசத்தையும் பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்ற நோக்கத்தில் குரலெழுப்பியவராவர்.
நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளை உலகறியச் செய்து, உண்மை நிலையை சர்வதேச நாடுகளுக்குக் கொண்டுசென்றதில் லக்ஷ்மன் கதிர்காமரின் பங்கு அளப்பெரியது. இலங்கையில் பணியாற்றிய ஒரேயொரு தமிழ் வெளிவிவகார அமைச்சர். தமிழ் கலாசாரத்துக்கு மட்டுமன்றி ஏனைய கலாசாரங்களுக்கும் மதிப்பளித்த நபராக அவர் காணப்பட்டார்.
நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஒற்றுமையான நாடொன்றில் வாழவேண்டும் என்பதையே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விரும்பியிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையானது பரஸ்பர பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என நம்பினார். அதுவும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தீர்வுத் திட்டங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. உள்நாட்டுக்குள் பேச்சுவார்த்தை மூலம் காணப்படும் தீர்வே ஸ்திரமான தீர்வாக அமையும் என்பதில் அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
சுனாமிக்குப் பின்னரான பொது முகாமைத்துவக் கட்டமைப்பை கதிர்காமர் கடுமையாக எதிர்த்தார். இது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பின் மீதும் அவர் கடுமையான நம்பிக்கை வைத்திருந்தார்.

No comments:
Post a Comment