Saturday, July 13, 2013

விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு : கவர்னரை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள் முடிவு!

Saturday, July 13, 2013
சென்னை::தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக, கவர்னரை சந்தித்து முறையிட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர்.

அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, 1ம் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், நேற்று முன்தினம், விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.ரிஷிவந்தியம் தொகுதியில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து, நலத்திட்ட உதவி வழங்க சென்ற, விஜயகாந்திற்கு, வழக்கு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விழாவை பாதியில் முடித்துக் கொண்டு, அவசரமாக அவர் அங்கிருந்து, பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

கோபம் :

இவ்வழக்கில், அவரை கைது செய்ய, போலீசார் தயாராகி வருவதால், முன் ஜாமின் பெற்ற பிறகே, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்ப, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, அக்கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதை கண்டித்து, போராட்டம் நடத்தவும், மக்கள் மத்தியில் பிரச்னையை விளக்கவும், தே.மு.தி.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். கவர்னரிடம் முறையிட, எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
 
கடந்த ஆகஸ்ட் மாதம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் பிரச்னை பற்றி பேசியதற்காக, விஜயகாந்த் மீது, 30க்கும் மேற்பட்ட, அவதூறு வழக்குகளை அரசு போட்டது. இவ்வழக்குகள் தொடர்பாக, ஒவ்வொரு கோர்ட்டிலும், விஜயகாந்த் நேரில் ஆஜராகி, விளக்கமளித்து வருகிறார். அனைத்து வழக்குகளையும், சட்டப்படி எதிர்கொள்ள, அவர் தயாராக இருக்கிறார். இச்சூழலில், கோர்ட்டில் நடந்த பிரச்னைக்காக, அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் புகார்தாரரான அரசு வழக்கறிஞர், "விஜயகாந்த் என்னை முறைத்தார்' என்று மட்டுமே தெரிவித்தார். விஜயகாந்த் முறைத்திருந்தாலும், அதற்காக அவர் மீது, கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருப்பது, எந்த வகையிலும் நியாயம் இல்லை.

முறையீடு:

விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் என்பதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை, மக்களிடம் கொண்டு செல்ல, முடிவு செய்துள்ளோம்; போராட்டம் நடத்த உள்ளோம். கவர்னர் ரோசய்யாவை சந்தித்து, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட உள்ளனர். முடிந்தால், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், பிரச்னைகளை விளக்குவோம்.இந்த சந்திப்பிற்கு, விஜயகாந்த் தலைமை ஏற்பாரா என்பதை இப்போது சொல்வதற்கில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

விஜயகாந்த் முன்ஜாமின் மனு :

கொலை முயற்சி வழக்கில், முன் ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மீண்டும் மனு தாக்கல் செய்தார்.கடந்த, அக்., 14ம் தேதி, நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெ., பற்றி அவதூறு பேசியதாக, விஜயகாந்த் மீது, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோவில் முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக, ஜூலை 1ம் தேதி, விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜரானார்.அப்போது, கோர்ட்டில், வேறு வழக்கு விசாரணை நடந்தது. விஜயகாந்தை பார்க்க வந்த தொண்டர்கள், கோஷம் எழுப்பியதால், "கோர்ட் நடவடிக்கையை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதியிடம், அரசு வழக்கறிஞர் ஞானசேகர் கோரினார்.
 
இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., - அ.தி.மு.க., வழக்கறிஞர்களுக்கிடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து, அரசு வழக்கறிஞர், "மற்றொரு வழக்கு விசாரணையின் போது, கோர்ட்டுக்குள் வந்த விஜயகாந்தை வெளியேற்றும்படி, நீதிபதியிடம் கூறினேன். இதை கேட்ட விஜயகாந்த், என்னை முறைத்தார். அவருடன் வந்தவர்கள், என்னை தாக்கினர்' என, போலீசில் புகார் செய்தார்.இதன்படி, விஜயகாந்த் உட்பட, நான்கு பேர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில், விஜயகாந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு:நானும், என் ஆதரவாளர்களும், அரசு வழக்கறிஞரை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, நான் முன்ஜாமின் கோரி, மனு செய்தேன். "என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தற்போது, உள்நோக்குடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment