Wednesday, July 17, 2013

புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் : சம்பிக்க ரணவக்க!

Wednesday, July 17, 2013
இலங்கை::புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்:-

வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது இதனை விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டு பிரிவினை வாதத்திற்கு துணை போன கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழீழ போராட்டத்திற்கு தலைமை தாங்க முன் வந்துள்ளர்.  புலிகளீன் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் இழப்பை நிரப்புவதற்காக விக்னேஸ்வரனை கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளதாகவே தெரிகின்றது.

ஓய்வு பெற்ற உயர் நீதமன்ற நீதியரசர் ஒருவர் இவ்வாறு பிரிவினைவாதிகளுடன் இணைந்துள்ளார் என்றால் அவரது முன்னைய காலப் பகுதி மற்றும் பணிகள் தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன. எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கையும் ஒன்றிணைத்து மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் செயற்பட்டதை விட மிகவும் ஆபத்தான சூழலே எதிர்வரும் நாட்களில் வடமாகாணத்திலும் ஏற்படப் போகின்றது.

ஏனெனில் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சட்டம் நன்கு தெரிந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வடக்கில் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் அன்று தொடக்கம் இலங்கைக்கு தலைவலி ஆரம்பித்து விடும். அவ்வாறானதொரு நிலையே ஏற்படப் போகின்றது. தமிழ்த்தேசியக்கூட்மைப்பின் தலைவர் சம்பந்தன் நன்கு ஆராய்ந்த பின்னரே மாவை சேனாதிராஜாவிற்கு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாது சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளார். இவர்களின் நோக்கம் மத்திய அரசுடன் வடமாகாணத்தில் மோத வேண்டும். அதற்கு பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற அதிகாரங்களை முழு அளவில் சட்ட ரீதியாக பெற்றுக்கொண்டு தனி தமிழீழ ஆட்சிக்கான அடித்தளமே இன்று இடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியா மற்றும் சர்வதேச பிரிவினைவாத புலி ஆதரவாளர்களும் உள்ளார்கள். எனவே அரசாங்கம் உண்மையான சூழலைப் புரிந்துகொண்டு வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களைக்கொண்டு அதிகாரங்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தேசப்பற்றுள்ள அனைத்து மக்களும் எம்முடன் ஒன்றிணைந்தே உள்ளார்கள். வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தனி தமிழீழம் உருவாவதை தடுக்க தேவையான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம். அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் உயிர் கொடுப்பதாகவே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அன்டன் பாலசிங்கத்தின் அவதாரத்தை இன்று சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இதனையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment