Monday, June 24, 2013
டேராடூன்::உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கிவிட்டது. இதனால் நேற்று பல மணி நேரம் மீட்புப்பணிகள் தடைபட்டது. பின்னர் மீட்புப்பணிகள் மீண்டும் தொடங்கியது. இமயமலைப்பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. 5 நாட்கள் ஓயாது பெய்த மழையால் வெள்ளப்பெருக்கும் பெரும் நிலச்சரிவும் சிக்கியது. இதில் பத்ரிநாத்,கேதார் நாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு சென்ற ஆயிரக்கணக்கானோர் சிக்கிக்கொண்டனர்.
சாலைகளும் அடித்துச்செல்லப்பட்டுவிட்டதால் பக்தர்கள் தப்பிச்செல்ல முடியவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. 550 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர், இணைராணுவத்தினர், மத்திய படையினர், போலீசார் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்டு கொண்டுவர 150 ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிக்கியவர்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த 400 பக்தர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டுவிட்டனர். இன்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை மீட்கும்பணி மும்முரமாக நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது. வெளிச்சம் சரியாக தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் மேகக்கூட்டம் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை. இதனால் மீட்புப்பணிக்கு தடங்கல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அச்சப்பட்டபடி நேற்று பல மணி நேரம் மீட்புப்பணியை தொடரமுடியாமல் இருந்தது. இதனால் வழியில் சிக்கியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்க முடியுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கடவுள் அருளால் மழை கொஞ்சம் நின்றதால் பல மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கின.
ஆனால் நேற்று மீண்டும் தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்தால் இன்னும் சிக்கியுள்ள 22 ஆயிரம் பேர்களை மீட்பது மிகவும் கடினம் என்று தெரிகிறது. மலைப்பகுதியில் சிக்கியிருப்பவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்தடுப்பு சாதனங்களை ராணுவத்தினர் கொண்டு சென்று சப்ளை செய்கின்றனர் என்று ராணுவ தலைமை தளபதி பிக்ராம் சிங் தெரிவித்துள்ளார். முதலில் ராணுவத்தினர் 500 பேர்தான் அனுப்பப்பட்டனர். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான 150 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் அனைத்து தரப்பினர்களிடத்திலும் முழு ஒத்துழைப்பு இருக்கிறது என்று பிக்ராம் சிங் மேலும் கூறினார்.
இதற்கிடையில் கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவிப்பதாக இந்தோ-திபெத் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பத்ரிநாத் பகுதியில் மட்டும் 8,500 பேர் சிக்கி தவிப்பதாக அவர் தெரிவித்தார். மலையின் மேட்டுப்பகுதியில் சிக்கியிருப்பவர்களை கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகிறார்கள். மீட்கப்படுபவர்கள் கோவிந்த் காட், ஜோஷிமாத்துக்கு பஸ் மற்றும் இதர மோட்டார் வாகனங்கள் மூலம் அழைத்துவரப்பட்டு டேராடூன், ஹரித்வார்,ரிஷிகேஷ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மீட்கப்பட்ட தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு திரும்பிக்கொண்டியிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 399 பேரும் டெல்லி கொண்டுவரப்பட்டு தமிழகத்திற்கு வந்து சேர்ந்துகொண்டியிருக்கிறார்கள். ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகம் திரும்பி உள்ளனர். இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணி மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் மழை அதிகமாக பெய்தால் மீட்புப்பணியை பாதிக்கலாம்.




















No comments:
Post a Comment