Monday, June 17, 2013

குவைத்தில் இலங்கை பெண் கொலை: தமிழக வாலிபர்கள் 2 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தம்!

Monday, June 17, 2013
சென்னை::திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் பட்டறைக்குளத்தை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். நீண்ட நாட்களாக குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுரேஷ். அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2008 - ம் ஆண்டில் குவைத்தில் இலங்கையை சேர்ந்த பாத்திமா கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுரேஷ், அவருடன் பணிபுரிந்த கும்பகோணத்தை சேர்ந்த தாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் தாஸ் நான்தான் கொலை செய்தேன். சுரேசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்தார். ஆனாலும் சுரேசை குவைத் போலீசார் விடுதலை செய்யவில்லை. வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இந்த வழக்கில் சுரேஷ், தாஸ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குவைத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சண்முகசுந்தரம் பல்வேறு முயற்சி எடுத்தும் சுரேசை விடுதலை செய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து சுரேசின் தாய் மல்லிகா ஜனாதிபதி, பிரதமர், முதல் - அமைச்சர் தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு தனது மகனை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுமாறு மனு அளித்தார்.

இந்த நிலையில் சுரேஷ், தாஸ் ஆகியோரை இன்று தூக்கில் போட குவைத் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடர்பாக அங்கு இருந்த சுரேசின் தந்தை சண்முக சுந்தரத்திற்கும் குவைத் அரசு தகவல் தெரிவித்தது.

இதுகுறித்து நாகை தொகுதி எம்.பி. ஏ.கே.எஸ். விஜயனிடம் சுரேசின் தாய் தகவல் தெரிவித்து தனது மகனை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனே பிரதமர் மன்மோகன் சிங் குவைத் அரசிடம் பேசினார்.

இதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் தாஸ் ஆகியோரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேசின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment