Thursday, June 13, 2013

13வது திருத்தம் தொடர்பான தமது யோசனைக்கு வாக்களிக்குமாறு ஐ.தேகவிடம் ஹெல உறுமய கோரிக்கை!

Thursday, June 13, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய கொண்டு வரவுள்ள தனிநபர் யோசனைக்கு தமது மனசாட்சியின் படி வாக்களிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக்கட்சியும் ஜாதிக ஹெல உறுமயவும் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது, அமைச்சர் இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.  இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக்கட்சி  தற்போது முன்வைத்துள்ள புதிய அரசியல் அமைப்புச் சட்ட யோசனை தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  அத்துடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, விஜேதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஹெல உறுமயவின் சார்பில் அதன் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அத்துரலியே ரத்ன தேரர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment