Monday, June 17, 2013

13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்பிப்பது என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் தினேஷ் குணவர்த்தன!

Monday, June 17, 2013
இலங்கை::நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்  நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்பிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது நாட்டு மக்களினால் கடந்த பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எனவே இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எதிர்க்கட்சியினரும் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் கருதுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டுவரும்நோக்கில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக ஆளும் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொரடா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் இரண்டு மாகாணங்கள் ஒன்றிணைவதற்கு இடமளிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற பிரிவை நீக்கிவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் இதனை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
 
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணையவதற்கான அனுமதியை வழங்குகின்ற பிரிவை நீக்கும் நோக்கில் ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.
 
அந்த வகையில் தற்போதைய நிலைமையில் குறித்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. வரைபு முடிக்கப்பட்டதும் அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்ப்பபட்டு பின்னர் ஜனாதிபதியினால் உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாககியானத்துக்காக அனுப்பப்படும்.
அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்பிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதாவது சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்பதனை பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிப்பார்கள்.
 
அவ்வாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் நாள் மற்றும் விவாதத்துக்கு உட்படுத்தப்படும் நாள் என்பன குறித்து ஆராயப்படும். எனவே யாரும் இந்த விடயத்தில் குழப்படையவேண்டியதில்லை. செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படும்.
இந்த சட்டமூலமானது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமூலமாகவும் அவசர சட்டமாகவும் கொண்டுவரப்படும் என்பதனை குறிப்பிடவேண்டும். இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை முன்மொழிவது குறித்தும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கப்படும்.
 
அதாவது ஆளும் கட்சியினால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதனை மீண்டும் புதுப்பிப்போம். மேலும் குறித்த தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் சார்பிலான உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த பெயர்கள் மீண்டும் சபாநாயகருக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இந்த விடயங்கள் குறித்தும் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும்.
 
இது இவ்வாறு இருக்க 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக்கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கொண்டுவரவுள்ள திருத்தங்களுக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் இருந்தாலும் இந்த சட்டமூலத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று நம்புகின்றோம். மேலும் எதிர்க்கட்சிகளிலிருந்தும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.
 
இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளமை குறித்து கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரட்ன 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்கவிடமாட்டோம் என்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் இன்றேல் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment