Friday, May 24, 2013

தேசத்தின் ஐக்கியத்தை நோக்கமாக கொண்ட புதிய அரசியல் அமைப்பு வகுக்கப்பட வேண்டும்: வாசுதேவ நாணயக்கார!

Friday, May 24, 2013
இலங்கை::தேசத்தின் ஐக்கியத்தை நோக்கமாக கொண்ட புதிய அரசியல் அமைப்பு வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் சோசலிச மக்கள் முன்னணி நேற்று குடியரசு தினத்தைக் கொண்டாடியது.
1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பை வகுப்பதில் முன்னின்று செயற்பட்ட கலாநிதி என்.எம்.பெரேராவும் இதன்போது நினைவு கூரப்பட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தி முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
 
வடக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் கூறிவரும் நிலையில் உறுதியளிக்கப்பட்டவாறு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அங்கு உரையாற்றுகையில், தேசத்தில் ஐக்கியமின்றி நாட்டின் இறைமையைப் பாதுகாக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.
 
ஒற்றுமையின்மையால் இலங்கையின் ஒரு தரப்பினர் 30 வருடங்களாகப் பிரிந்து இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதம செயலாளர் அமைச்சர் டி.யூ.குணசேகர, அரசியல் அமைப்பு தொடர்பிலான பிரச்சனைக்கு அரசாங்கத்தினால் தனித்து தீர்வுகாண முடியாது என சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment