Wednesday, May 22, 2013

தூத்துக்குடி கடலோர காவல்படையில் புதிய ரோந்து கப்பல் சேர்ப்பு!

Wednesday, May 22, 2013
தூத்துக்குடி::ரோந்து மற்றும் மீட்பு பணிக்காக, கடலோர காவல்படையில், "வைபவ்' என்ற புதிய கப்பல், சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையில், 27 ஆண்டாக பணிபுரிந்த, ரோந்துக் கப்பல், "வீரா' நேற்று முன்தினம் ஓய்வு பெற்றது. அந்த இடத்தில், புதிய ரோந்து கப்பல், "வைபவ்' நேற்று காலை, பணியில் சேர்க்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி, தூத்துக்குடி, வ.உ.சி., துறைமுக, எட்டாவது கப்பல் தளத்தில், கடலோர காவல்படை, வைஸ் அட்மிரல், அனுராக் தபிலியால் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், வைஸ் அட்மிரல் பேசியதாவது:

புதிகாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள கப்பல், மன்னார் வளைகுடாவில் ரோந்து, மீட்பு, கடலில் சிறிய அளவில் கலக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும்.
வான்வெளி பாதுகாப்பை கண்காணிக்க, தூத்துக்குடியில், விமானத்தளம் அமைக்கப்படவுள்ளது. இந்திய கடலில்,போதிய மீன்கள் கிடைப்பதில்லை என்ற காரணத்திற்காக, நம் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கின்றனர். நம் மீனவர்கள், எல்லை தாண்டக் கூடாது. இருநாட்டு எல்லையை குறிக்கும் வகையில், கடலில் தூண்கள் இல்லை. எல்லை தாண்டி, மீன்பிடிக்க வரும், இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என, இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளோம்.

கச்சத்தீவு, நம் நாட்டில் இல்லையென்பதால், நம் கப்பல்கள் அங்கு ரோந்து செல்ல முடியாது. ஆனால், அதனருகே, பாக்., ஜலசந்தியில், நம் கடலோர காவல்படை கப்பல் ஒன்றும், கடற்படை கப்பல் ஒன்றும், ரோந்து சுற்றி வருகின்றன; விமானம் மூலம், வான்வெளி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில், "வைபவ்' கப்பல், கோவாவில், மற்றொரு கப்பலில் மோதி, விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, விசாரணை நடந்துவருகிறது. அதுகுறித்த அறிக்கை வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, வைஸ் அட்மிரல் கூறினார்.
பன்முகப் பயன்பாடு கொண்ட கப்பல் ;

தனியார் நிறுவனம் கட்டியுள்ள, "வைபவ்' கப்பல், கடந்த மார்ச்சில், கடலோரக் காவல் படையிடம், ஒப்படைக்கப்பட்டது. 90 மீட்டர் நீளம் கொண்டது. 10 அதிகாரிகள் மற்றும் 84 மாலுமிகள், இதில், பணியாற்றுகின்றனர். நவீன தொலை தொடர்பு சாதனங்கள், தீயணைப்பு கருவி, துப்பாக்கி, மீட்பு பணிக்காக, ஒரு ஹெலிகாப்டர், ஐந்து அதிவிரைவு படகுகள், கடலில் படியும், எண்ணை கழிவுகளை அகற்றும் வசதி உள்ளிட்டவை, இதில் உள்ளன. மன்னார் வளைகுடா முதல், சர்வதேச கடல் எல்லை வரை, இக்கப்பல் ரோந்து, மீட்பு பணியில் ஈடுபடும். விசாரணையில் உள்ளது ; கடந்த ஏப்ரலில், இக்கப்பல், கோவா துறைமுகப் பகுதியில், வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது, சிறு படகு ஒன்றின் மீது மோதி, விபத்து ஏற்பட்டது. அதில், ஆறு பேர் பலியாயினர். இந்த விபத்து குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment