
Tuesday, May 14, 2013
திருச்சி::தஞ்சை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 30) இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி விமான நிலையம் அருகே கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமீம் அன்சாரி இந்தியாவின் ராணுவ ரகசியங்களை இலங்கையில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடமிருந்து ஊட்டி லிவிங்டன் ராணுவ பயிற்சி அமையம், கல்பாக்கம் அணுஉலை, காரைக்கால், நாகை துறைமுகங்களின் வரைபடங்கள், மற்றும் சி.டி.க்களை போலீசார் கைபற்றினர்.
இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டமும் தமீம் அன்சாரி மீது பாய்ந்தது. கடந்த 8 மாதங்களாக தமீம் அன்சாரி திருச்சி மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு தமீம் அன்சாரி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி நமீலா மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் நீதிபதிகள் செல்வம், மற்றும் சத்யநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய உத்திரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி திருச்சி சிறையில் இருந்து தமீம் அன்சாரி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு திடீரென தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) அமைப்புக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
இதைதொடர்ந்து இவ்வமைப்பின் 2 அதிகாரிகள் சென்னையில் இருந்து திருச்சி வந்தனர். திருச்சி கியூ பிரிவு போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது திருச்சி 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கை சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமீம் அன்சாரி வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் வழக்கு சூடுபிடித்துள்ளது. சர்வதேச குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகள் மட்டுமே தேசிய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று இவ்வழக்கும் இந்தியா ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தியதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் என்பதால் இவ்வழக்கையும் தேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment