Wednesday, May 1, 2013

ராமதாஸ், காடுவெட்டி குரு & பாமகவினர் கூண்டோடு கைது!

Wednesday, May 01, 2013
சென்னை::மரக்காணத்தில் நடந்த கலவர சம்பவத்தில், போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, நேற்று, விழுப்புரத்தில் பா.ம.க.,வினர், தடையை மீறி நடத்திய ஆர்பாட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். 15 நாள், "ரிமாண்ட்' செய்யப்பட்ட அவர், திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 25ம் தேதி, வன்னிய இளைஞர் பெருவிழா, மாமல்லபுரத்தில் நடந்தது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாவிற்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கும், மரக்காணத்தில் ஒரு பிரிவு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு, "விழாவிற்கு வந்தவர்களே காரணம்' என, கடந்த 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார். பா.ம.க., தரப்பில், "போலீசார் போதிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செ#யாதது தான் மோதலுக்கு காரணம்' என, குற்றம்சாட்டப்பட்டது.
இந்த பின்னணியில், வி.சி., கட்சியினர் மற்றும் மோதலை ஒட்டிய போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரத்தில், நேற்று காலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நேற்று முன்தினம் போலீசார் தடை விதித்தனர். ஆனால், நேற்று காலை 9:00 மணிக்கு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்காகத் திரண்டனர். பாதுகாப்பு பணியில் டி.ஐ.ஜி., முருகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
முற்பகல் 11:00 மணிக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்திலிருந்து காரில் விழுப்புரம் வந்தார். நகர எல்லையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் அருகே, 11:30 மணிக்கு, ராமதாஸ் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
காரிலிருந்த ராமதாசிடம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை கருதி, கைது செய்ய உள்ளதாக டி.ஐ.ஜி., முருகன் கூறினார். அதனை ஏற்க மறுத்த ராமதாஸ், ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கும்போது, கைது செய்யுமாறு கூறிவிட்டு சென்றார்.
பகல் 12:15 மணிக்கு, விழுப்புரம் ரயிலடிக்கு வந்து, காரிலிருந்து இறங்கிய ராமதாசை, போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். மேலும், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி மாநில செயலர் அனந்தராமன், முன்னாள் எம்.பி, தன்ராஜ், அமைப்பு செயலர் செல்வக்குமார் உட்பட, 60 பேரை போலீசார் கைது செய்து, அதே வாகனத்தில் ஏற்றிச் சென்று, விழுப்புரம் கிழக்கு, பாண்டி ரோட்டில் உள்ள பாலாஜி மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மாலை 5:00 மணிக்கு, பாலாஜி மண்டபத்திற்கு வந்த டி.ஐ.ஜி., முருகன், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை ஒன்றாக அமர வைத்தார். பா.ம.க., நிர்வாகிகள் வைத்துள்ள பணம், மொபைல் போன்களை உறவினர்களிடம்
ஒப்படைக்குமாறு போலீசார் கூறினர். பா.ம.க.,வினர் மாலை 5:30 மணி முதல் 6:30 வரை உறவினர்களை வரவழைத்து தங்களின் மொபைலை தந்தனர்.இரவு 7:00 மணிக்கு, பாலாஜி மண்டபத்திற்கு வந்த விழுப்புரம் இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில், பா.ம.க., நிர்வாகிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை சிறையில், 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
வழக்குகள்:
விழுப்புரத்தில் நடந்தஇச்சம்பவத்தில், ராமதாஸ் மீது, சட்டவிரோதமாக அனுமதியின்றி ஒன்றுகூடுதல்(143), கும்பலாகக் கூடி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்(188) மற்றும் அரசுக்கு எதிராக குந்தகம் விளைவித்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 15 நாள் காவலில் வைக்கப்பட்ட அனைவரும், திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறை செல்ல தயாராகத்தான் வந்துள்ளேன் ராமதாஸ்

நான் சிறை செல்ல தயார்படுத்தி கொண்டுதான் புறப்பட்டு வந்துள்ளேன்,'' என, ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, கைது செய்யப்பட்ட ராமதாஸ், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார்.அப்போது, ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதியளித்த போலீசார், நேற்று முன்தினம் மாலை, திடீரென அனுமதி மறுத்துள்ளனர். பா.ம.க., தொண்டர்கள் கூடி அமைதியான வழியில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். நான் சிறை செல்ல தயார்படுத்தி கொண்டுதான் புறப்பட்டு வந்துள்ளேன்.தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசக் கூடாது என போலீசார் கூறியதற்காக, பேசாமல் அமைதியாக வந்துள்ளேன். காவல் துறையினர் செய்த தவறுகளை மூடி மறைத்து, அவர்கள் எழுதி கொடுத்த அறிக்கையை முதல்வர் அப்படியே வாசித்துள்ளார். இதன் மூலம் முதல்வர், 2 கோடி வன்னிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். அவர்கள் வேதனைப்படும் வகையில் உண்மைக்கு மாறான செய்திகளை முதல்வர் சொல்லியுள்ளார்.
மரக்காணம் ஓர் பதற்றமான ஊர் என்பதை, கடந்த 24ம் தேதி, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்டு உள்ளது. இதுபோல் மாமல்லபுரத்தில், 2002ம் ஆண்டு, வன்னிய இளைஞர்கள் மரக்காணம் வழியாக சென்ற போது, இருவரை, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம் மரக்காணத்தில் நடந்துள்ளது. இதுபோன்ற பதற்றமான இடத்தில் போலீசார்,2 நாட்களுக்கு முன்னதாக தகுந்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்திருந்தால், கலவரம் நடந்திருக்காது. இதற்கு போலீசார் தவறிவிட்டனர். பதற்றமான மரக்காணம் பகுதியில், அன்று, மூன்று போலீசாரை மட்டும் பாதுகாப்பிற்கு நிறுத்தியிருந்தனர்.கலவரத்தின் போது, போலீசார், மரக்காணத்தில், 20 கி.மீ. தொலைவிற்கு அணிவகுத்து நின்ற பா.ம.க.,வினர் வாகனங்களை, வேறு திசையில், மாற்றுவழி மூலம் அனுப்பியிருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது. மாமல்லபுரம் நோக்கி வந்து என்ன நடக்கிறது என, தெரியாமல் வாகனத்தை விட்டு கீழே நின்றிருந்த வன்னியர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 15 வன்னியர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர்.கலவரத்தில், கும்பகோணத்தை சேர்ந்த விவேக், அரியலூரை சேர்ந்த செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டனர். இதில் விவேக் விபத்தால் தான் இறந்தார் என, அவரது உறவினரை போலீசார் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர்.இந்த உண்மை அனைத்தையும் காவல் துறையினர் மறைத்து விட்டு, தவறான தகவல்களை முதல்வருக்கு கொடுத்துள்ளனர்.

மரக்காணம் சம்பவத்தில், நியாயமான விசாரணை வேண்டும் என்றால், சி.பி.ஐ., விசாரணை வையுங்கள் அல்லது பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்துங்கள் என, நாங்கள் கேட்கிறோம்.இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.
 
புழல் சிறையில் காடுவெட்டி குரு அடைப்பு!
 
சென்னை::வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மாமல்லபுரத்தில், கடந்த, 25ம் தேதி நடந்த சித்திரை முழு நிலவு விழாவில் பங்கேற்ற, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் பேசியதாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையொட்டி, நேற்று, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, செங்கல்பட்டு பெண்கள் கோர்ட் நீதிபதி, காஞ்சனா வீட்டில் காடுவெட்டி குருவை போலீசார் ஆஜர் படுத்தினர். பின், அவரை, மே 3ம் தேதி வரை காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, காடுவெட்டி குரு, நேற்று இரவு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, ராமதாஸ் மற்றும் குரு கைதைக் கண்டித்து, தமிழகத்தில், சில மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட , 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அத்துடன், சில இடங்களில், அரசு பேருந்துகளை எரித்தவர்களையும் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment