Friday, May 31, 2013

கச்சத்தீவு பகுதியில் அடையாள மிதவைகள் மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!

Friday, May 31, 2013
ராமேஸ்வரம்::கச்சத்தீவு கடல் பகுதியில் அடையாள மிதவைகளை போட்டுள்ள இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மீன்பிடி தடை நாட்டுப்படகு மீனவர்களுக்கு கிடையாது என்பதால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தடை காலத்திலும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இதுவரை எந்த தொல்லையும் இன்றி மீன் பிடித்து வந்துள்ளனர். கச்சத்தீவில் 2, 3 நாட்கள் வரை தங்கி இருந்தும் மீன்பிடித்து வந்தனர். ரோந்து வரும் இலங்கை கடற்படையினரும் இவர்களை சோதனை செய்வதுடன், வேறு தொல்லை கொடுக்காமல் சென்று விடுவர். இதனால் கடந்த 45 நாட்களும் பிரச்னை இல்லாமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் நாளை (ஜூன் 1) முதல் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை மன்னாரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்திய இலங்கை மீனவர் சங்கத்தினர், மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாமில் அதிகாரிகளை சந்தித்து, ‘இந்திய மீனவர்கள் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் தங்களது மீன்பிடி சாதனங்கள் சேதமடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தற்போது கச்சத்தீவை சுற்றி 4 முனைகளிலும் இலங்கை கடற்படையினர் புதிதாக அடையாள மிதவைகளை மிதக்க விட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெரிய கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளில் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களை இனிமேல் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இந்த திடீர் நடவடிக்கை ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணிராயப்பன், மகத்துவம், ஜேம்ஸ் ஆகியோர் கூறுகையில், “தங்கச்சிமடத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றோம்.

நேற்று முன்தினம் காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்திற்கு மாறாக 5 பெரிய இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வந்தன. பல ரோந்து படகுகளும் உடன் வந்தன. எங்கள் படகுகளுக்கு  அருகே ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருவதால், இனிமேல் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இன்று மட்டும் மீன்பிடித்துச் செல்லுங்கள். இனிமேல் இப்பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்தனர். இதனால் நாங்கள் கரை திரும்பி விட்டோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment