Saturday, May 11, 2013

கோஹ்லி 99 ரன் விளாசினார் பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் வெற்றி!

Saturday, May 11, 2013
புதுடெல்லி::டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் பொறுப்பேற்றார். மகிளா ஜெயவர்தனே சாதாரண வீரராக இடம் பெற்றார்.

சேலஞ்சர்ஸ் தொடக்க வீரர்களாக புஜாரா, கிறிஸ் கேல் களமிறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 4 ரன் மட்டுமே எடுத்து இர்பான் பதான் வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேற, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து புஜாராவும் 17 ரன் எடுத்த நிலையில் சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

சேலஞ்சர்ஸ் 5 ஓவரில் 32 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் கோஹ்லியுடன் ஹென்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 26 ரன் எடுத்து ஷாபாஸ் நதீம் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து கோஹ்லியுடன் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் இணைந்தார். பொறுமையாக விளையாடிய கோஹ்லி 44 பந்தில் அரை சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் இருவரும் டேர்டெவில்ஸ் பந்துவீச்சை பதம் பார்க்க சேலஞ்சர்ஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மார்க்கெல் வீசிய ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 18 ரன் விளாசினர். அடுத்து உமேஷ் யாதவ் வீசிய 18வது ஓவரில் கோஹ்லி 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன் குவித்து அசத்தினார்.

இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டேர்டெவில்ஸ் பவுலர்கள் திணறினர். யாதவ் வீசிய கடைசி ஓவரிலும் அடுத்தடுத்து 2 பவுண்டரி, 2 சிக்சர் தூக்கி அமர்க்களப்படுத்து கோஹ்லி, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 99 ரன் எடுத்த நிலையில் (58 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி சதம் பூர்த்தி செய்யும் வாய்ப்பை நழுவவிட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கோஹ்லி , டிவில்லியர்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தது. சேலஞ்சர்ஸ் அணிக்கு கடைசி 5 ஓவரில் மட்டும் 84 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

டிவில்லியர்ஸ் 32 ரன் எடுத்து (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 20 ஓவரில் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பு 179 ரன் எடுத்தது.  7  பந்தில் 25 ரன் எடுக்க வேண்டியிருந்த நிலையில்  பதான் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். இதே போல் மார்க்கல் அதிரடியாக ஒரு பவுண்டரி அடித்தார். அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்கெல் 19 ரன்னில் அவுட்டானார். இதனால் டெல்லி அணியின் வெற்றி கனவு தகர்ந்தது.

No comments:

Post a Comment