Monday, May 06, 2013
இலங்கை::யுத்தத்தினால் சின்னாபின்னமாகியிருந்த கிளிநொச்சி மாவட்டம் இன்று புதுப்பொலிவுடன் தோற்றமளிப்பதற்கு அம்மாவட்டத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடனான சமூக சேவையே பிரதான காரணமாகும்.
கடந்த வாரம் நாம் இம்மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுடன் நடத்திய பேட்டியின் மூலம் இராணுவத்தினர் இம்மாவட்டத்தின் மேம்பாட்டுக்காகவும் அங்குள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேற்கொண்டுவரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.
இந்த வாரம் ஆயுதப்படையினருக்கு உறுதுணை புரியக்கூடிய வகையில் அவர்களின் பொதுத் தொண்டினையும் மீறிவிடக்கூடிய அளவுக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விஸ்வமடு முகாமின் கட்டளைத்தளபதி லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு. டபிள்யு. ரத்னபிரிய மேற்கொண்டு வரும் நற்பணிகளை விளக்கிக் கூற விரும்புகிறோம்.
30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் கேந்திர நிலையமாக கிளிநொச்சி மாவட்டம் விளங்கியது. அதில் விஸ்வமடு பிரதேசம் எல்.ரி.ரி.ஈயின் மூலஸ்தானமாக இருந்து வந்தது. அங்குதான் எல்.ரி.ரி.ஈயின் தலைவர் பிரபாகரன் தனது பாதுகாப்பான மறைவிடத்தை நிர்மாணித்திருந்தார்.
ஷெல் வெடிகள் அல்ல, அணுகுண்டுகள் கூட தகர்க்க முடியாத அளவுக்கு 4 அடி விட்டத்தைக் கொண்ட பிரமாண்டமான சுவர்களை நிர்மாணித்து தரைக்கடியில் குளிரூட்டி உட்பட சகல இராஜபோகங்களுடன் பிரபாகரன் வாழ்ந்து வந்ததை அவ்விடத்திற்கு சென்ற போது நாம் கண்டறிந்தோம்.
30 ஆண்டுகால யுத்தத்தின் போது கிளிநொச்சி மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் இலங்கை இராணுவம் உட்பட ஆயுதப்படையினரின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. இதனால் கிளிநொச்சியில் வாழும் மக்கள் இந்த 30 ஆண்டு காலத்தில் ஒரே வசிப்பிடத்தில் ஓரிரு மாதங்கள் மாத்திரமே தங்கியிருக்கக்கூடியதாக இருந்தது.
யுத்தத்தின் தாக்கத்துக்கு அமைய கிளிநொச்சி மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காக இடம் மாறிய வண்ணம் குறவர்களைப் போன்று வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த வயோதிபர்கள், இளம் பெண்கள், சிறு குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பதற்காக எத்தனையோ நாட்கள் பயங்கர காட்டு யானைகளும், சிறுத்தைகளும், கரடிகளும், நச்சுப் பாம்புகளும் குடியிருந்த அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்தார்கள்.
![]() லெப்டினன்ட் கேர்ணல் ரத்னபிரிய இந்த புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கவுள்ளார் |
அவர்களுக்கு உண்ண உணவோ, தாகத்தை தீர்ப்பதற்கு சுத்தமான குடிநீரோ கிடைப்பது அரிதாக இருந்தது. அத்துடன் சுகாதார வசதிகளும் இன்றி காடுகளிலேயே தங்களின் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவல நிலையில் இருந்தார்கள்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் எல்.ரி.ரி.ஈ தலைவர்களின் உத்தரவுப்படி செயற்படும் அடிமைகளைப் போல் நடைப்பிணங்களாக இந்த 30 ஆண்டு காலத்தில் உயிர்வாழ்ந்தார்கள். இந்த 30 ஆண்டு காலத்தில் பிறந்த பிள்ளைகள் இப்போது அங்கு இளைஞர்களாகவும் யுவதிகளாகவும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு வெளி உலக தொடர்பு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு சிங்கள மக்கள் எப்படிப்பட்டவர்கள், நல்லவர்களா? கருணை உள்ளம் படைத்தவர்களா? அல்லது கொடியவர்களா? என்பது கூட தெரியவில்லை. இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டது. சமாதானமும் அமைதியும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமன்றி நாடெங்கிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கின்றது.
எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டிலேயே இந்த இளைஞர்களும், யுவதிகளும் யுத்தம் முடிவடையும் வரையில் இருந்தார்கள். சிங்களவர்களையும் இராணுவத்தையும் எல்.ரி.ரி.ஈ தமிழர்களின் எதிரிகளாகவும் கொலைஞர்களாகவும் கொடியவர்களாகவும் சித்திரித்து தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை சிங்களவர்களை பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற உணர்வோடு இயந்திர மனிதர்களாக உருவாக்குவதில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் ஒரு விதத்தில் வெற்றி கண்டது.
அதனால் தான் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் உயிர்த்தியாகம் செய்தாவது எதிரிகளான சிங்களவர்களையும் இராணுவத்தினரையும் அழிக்க வேண்டுமென்ற வெறியுடன் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள். தற்கொலை குண்டுதாரிகளான இந்த இளைஞர்கள், யுவதிகளின் பெரும்பாலானோர் நல்ல கண்ணியமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
![]() லெப்டினன்ட் கேர்ணல் ரத்னபிரிய மோட்டார் சைக்கிள் ன்றை பெண் ஊழியருக்கு வழங்குகிறார் |
இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்களும், யுவதிகளும் யுத்த காலத்தில் மாண்டு போனார்கள். இன்று தெய்வாதீனமாக உயிர்தப்பியிருக்கும் இளைஞர்களும், யுவதிகளும் வறுமையில் துவண்டுகொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்போ வெளிநாடுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகளோ, புலம்பெயர்ந்த தமிழர்களோ எவ்வித உதவியும் செய்யவில்லை. வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசி டொலர் நோட்டுகளை வாங்கி தங்கள் பைகளில் போட்டுவிடுவதில் மாத்திரமே வெளிநாடுகளில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அரசசார்பற்ற அமைப்புகளும், புலம்பெயர்ந்த தமிழர்களும் சிரத்தையுடன் செயற்படுகிறார்கள் என்பதை நாம் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் இப்பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக எவ்வளவோ நற்பணிகளை செய்கிறார்கள். எல்.ரி.ரி.ஈயுடன் சம்பந்தப்பட்ட பல இளம் பெண்கள் இராணுவ பெண்கள் படையில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார்கள். அது போன்று சிவில் பாதுகாப்பு திணைக்களமும் அவ்விதம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடைவதற்கு மகத்தான தொண்டுகளை செய்து வருகின்றது.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள முகாமின் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு.டபிள்யு. ரத்னபிரிய இந்தப் பணியை நிறைவேற்றுவதில் ஆயிரத்தில் ஒருவராக தன்னலமற்ற சேவையை மிகவும் உன்னதமான முறையில் செய்து வருகிறார். இவரது முகாம் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கு இது வரையில் 3,500 இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 23,000ரூபா மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு முகாமின் கீழ் லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு.டபிள்யு. ரத்னபிரிய 12 பண்ணைகளை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துகின்றார். இங்கு பருப்பு வகைகள், சோளம், நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்வதன் மூலம் முகாமுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு முகாமின் கீழ் லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு.டபிள்யு. ரத்னபிரிய 12 பண்ணைகளை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துகின்றார். இங்கு பருப்பு வகைகள், சோளம், நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்வதன் மூலம் முகாமுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது.
இங்கு பணிபுரியும் பெண்களின் சிறு பிள்ளைகளையும், கைக்குழந்தைகளையும் பராமரிப்பதற்காக இப்பிரதேசத்தில் பல சிறுவர் பராமரிப்பு நிலையங்களை லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யு.டபிள்யு. ரத்னபிரிய அமைத்துள்ளார். இந்தப் பிள்ளைகளை காலை முதல் மாலை வரையும் பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
லெப்டினன்ட் கேர்ணல் ரத்னபிரிய இத்துடன் நின்றுவிடாமல் இப்பிரதேசத்தில் வறிய பிள்ளைகளின் கல்விக்காக 250 பாலர் பாடசாலைகளை அமைத்து அதில் 430 ஆசிரியைகளை நியமித்துள்ளார். சாதாரணமாக நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கு மிகவும் குறைந்த சம்பளமே கொடுக்கப்படுகிறது. ஆனால், இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் முகமாக இந்த ஆசிரியைகளுக்கு மாதாந்தம் 23,000 ரூபா சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 பிரதான வீதியைத் தவிர ஏனைய கிராமங்களுக்கு பயணிப்பதற்கான பொதுப் போக்குவரத்து சேவை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கிறது. கிளிநொச்சி மாவட்டம் முழுவதுக்கும் 10 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே சகல கிராமங்களையும் ஒன்றிணைக்கும் பணியை செய்கின்றன. இதனால் இப்பிரதேச மக்கள் பெரும்பாலும் துவிச்சக்கர வண்டிகளையும், மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்துகிறார்கள்.
![]() விஸ்வமடு சிவில் பாதுகாப்பு தலைமையக முகாமில் தான் உருவாக்கிய டனக்குழுவினருடன் லெப்டினன்ட் கேர்ணல் ரத்னப்பிரிய |
தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரும் சரியான நேரத்திற்கு கடமைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாதிருப்பதே காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ள இவர், தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு 1000 மோட்டார் சைக்கிள்களையும் 750 துவிச்சக்கர வண்டிகளையும் இலகு கடன் அடிப்படையில் வாங்குவதற்கு உதவி செய்துள்ளார். இவர்களின் சம்பளத்தில் இருந்து இதற்கான குறிப்பிட்ட தொகை மாதா மாதம் செலுத்தப்படுகின்றது.
கேர்ணல் ரத்னபிரிய தனது முகாமில் பரதநாட்டிய மற்றும் மேற்கத்திய நாட்டிய குழுக்களையும் இசைக்குழுவொன்றையும் உருவாக்கியுள்ளார். இந்தக் குழுக்கள் வடபகுதியில் நடைபெறும்
பொது நிகழ்ச்சிகளின் போது தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களினதும் அங்கு வருகை தரும் பிரதம அதிதிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார்கள்.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் இந்தளவு சாதனைகளைப் புரிந்து மக்கள் பாராட்டை பெற்றிருப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரெயார் எட்மிரல் ஆனந்த பீரிஸ் தமக்கு அளிக்கும் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் ஆதரவுமே பிரதான காரணமென்று லெப்டினன்ட் கேர்ணல் ரத்னபிரிய பாராட்டுகிறார்.
இதே வேளையில் சங்கைக்குரிய வண.வாசி இராகுல தேரர் விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்துக்கு 10இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார். அந்த புத்தகங்களை கேர்ணல் ரத்னபிரிய மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளார். அத்துடன் ஜயபுரத்தில் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பிப்பதற்கும் சங்கைக்குரிய தேரர் 50ஆயிரம் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான நிகழ்வுகள் முல்லைத்தீவு ஜயபுரம், மல்லாவி ஆகிய இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் 400ற்கும் அதிகமானவர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் ஏற்கனவே முன்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சிகளைப் பெற்ற ஒரு தொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட வுள்ளன. இன்று (05.05.2013) நடைபெறவிருக்கும் நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கவிருப்பதுடன், ஜயபுரம் மற்றும் மல்லாவி ஆகிய இடங்களில் முன்பள்ளிகளையும் திறந்து வைக்கவுள்ளார்.




No comments:
Post a Comment