Monday, April 29, 2013

நீண்ட இழுபறிக்கு பின்னர் இத்தாலி பிரதமராக லெட்டா பதவியேற்பு துப்பாக்கிச் சூடு நடந்ததால் பதற்றம்!

Monday, April 29, 2013
ரோம்::நீண்ட இழுபறிக்கு பின்னர், கூட்டணி அரசின் பிரதமராக என்ரிகோ லெட்டா நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்னர், வேலைவாய்ப்பு இழந்த வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இத்தாலியில் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அப்போ கடும் பொருளாதார நெருக்கடி, வரி ஏய்ப்பு, இளம்பெண்களுடன் உல்லாசம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து பெர்லுஸ்கோனி விலகினார். அதன்பின், இடைக்கால நிர்வாக அரசு பொறுப்பு வகித்தது. இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தது. இதில் பெர்லுஸ்கோனி மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகள் களம் இறங்கின. எனினும், எந்த கட்சிக்கும் மெஜாரிடி கிடைக்கவில்லை.

இந்நிலையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. பிரதமர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவியது. கன்சர்வேடிவ் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், கூட்டணி அரசு அமைக்கவும், டெமாக்ரிட்டிக் கட்சியின் என்ரிகோ லெட்டா (46) தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்பின், கூட்டணி அரசு அமைக்க நேற்றுமுன்தினம் முடிவானது. அதன்படி, இத்தாலியின் அடுத்த பிரதமராக லெட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பு விழா ரோம் நகரில் அதிபர் மாளிகையில் நடந்தது. இதற்கு அதிபர் ஜியார்ஜியோ நேபோலிடானோ தலைமை வகித்தார். பிரதமராக லெட்டாவும், 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்புக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள கொலானோ சதுக்கத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூடியிருந்தனர். அங்கு வந்த  ஒருவர் திடீரென போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இன்னொருவரின் காலில் குண்டு பாய்ந்து எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குண்டு சத்தம் கேட்டவுடன் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து ரோம் போலீசார் கூறியதாவது:

அரசியல்வாதிகளை கொல்லவே திட்டமிட்டு துப்பாக்கியுடன் அவர் வந்துள்ளார். அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு சென்றதால், போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். உடனடியாக அவரை மற்ற போலீஸ்காரர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் பெயர் லூஜி பிரீட்டி (49) என்பதும், கலாப்ரியா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கட்டுமான பணி செய்து வந்த லூஜி வேலையை இழந்துள்ளார். அதனால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.பிரதமர் அலுவலகம் அருகில் துப்பாக்கிச்
சூடு நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment