Sunday, March 17, 2013
சென்னை::இலங்கை பிரச்சினை மாணவர்கள் போராட்டத்தால் விசுவரூபம் எடுத்துள்ளது.
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதே அர்த்தமற்றதாகி விடும் என்று கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசில் இருந்து தி.மு.க. எந்த நேரத்திலும் விலகலாம் என்ற பேச்சு அடிப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா சில திருத்தங்களுடன் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரும் இதை சூசகமாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதுபற்றி கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி இருவருக்கும் தனித்தனியாக ஒரு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறேன். கடிதத்தை தொடங்கும்போதே இலங்கை அரசு நிர்வாகம் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்று குவித்ததை சர்வதேச போர் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்.
கேள்வி: ஆரம்பத்தில் இருந்தே இந்த விசயத்தில் நீங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே?
பதில்: மத்திய அரசு சீரியசாக நான் குறிப்பிட்டு இருக்கும் இந்த திருத்தங்களோடு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம்.
கே: பிறமாநில பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?
ப: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம்.
கே: காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. நீடிக்கிறதா?
ப: கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போமா என்பதில் எங்களுக்கும் சந்தேகமே. ஆனால் நீடிக்காது என்பது உறுதி.
கே: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவும் செய்யவில்லையே?
ப: அதுதான் தமிழனின் தலை எழுத்து.
கே: தற்போதைய சூழ்நிலையில் மத்தியில் இருந்து யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா?
ப: யாரும் என்னோடு பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.



No comments:
Post a Comment