Tuesday, March 19, 2013

இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் அமளி; மதியம் வரை ஒத்திவைப்பு!

Tuesday, March 19, 2013
புதுடில்லி::இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்களின் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதும், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பிஜேபி., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அ.தி,மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில் இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க., உறுப்பினர் தம்பிதுரை பேசுகையில், இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,அமெரிக்க தீர்மானத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. மாணவர்களின் போராட்டத்தினால் தமிழகம் பற்றி எரிகிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். திருத்தம் கொண்டு வருவதில் அரசின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும். ஐ.நா., கவுன்சிலில் இந்திய அரசின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

இதன் பின்னர் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்ய சபாவிலும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அவையின் மையத்திற்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி, உறுப்பினர்களை இருக்கையில் சென்று அமருமாறு கூறினார்.இருந்தும் அவையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ராஜ்யசபா 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும், கோஷங்கள் தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment