Tuesday, March 5, 2013

இலங்கை அதிபர் ராஜபட்சவை எதிர்த்துத் தீக்குளித்த (புலிகளின் ஆதரவாளர்-நாம் தமிழர் கட்சி) கடலூர் மணி மரணம்!

Tuesday, March 05, 2013
கடலூர்::இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மீனவர் திங்கள்கிழமை தீக்குளித்து இறந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணனின் மகன் மணி(40). மீனவர். நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார். திங்கள்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கூறியவாறு உடலில் தீவைத்துக் கொண்டார்.

அருகில் டீக்கடையில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

புலிகளுக்கு  ஆதரவாகவும், சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழலுக்கு எதிராகவும் தீக்குளித்தாக அங்கிருந்தவர்களிடம் மணி கூறியுள்ளார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு மணி இறந்தார்.

தனது கிராமத்தில் சுனாமி வீடு கட்டுவதில் ஊழல் நடந்ததாக கூறிவந்த மணி, அடிக்கடி அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடலூரில் போராட்டம் நடத்தியவர். அதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உள்ளார்.

இவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சுனாமி வீடு கட்டுவதில் உள்ள பிரச்னை தொடர்பாக அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரி ஒருவரை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தீக்குளிப்பதற்கு முன்பு, ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், சுனாமி வீடு கட்டுவதில் உள்ள ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment