Saturday, March 30, 2013

விஷவாயு கசிவு எதிரொலி : ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு!

Saturday, March 30, 2013
தூத்துக்குடி::தூத்துக்குடியில் விஷவாயு கசிவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலை இன்று உடனடியாக மூடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் கடந்த 23ம் தேதி அதிகாலை திடீரென்று காற்றில் விஷவாயு கலந்தது. இதனால் பலருக்கு கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. கடற்கரை ரோடு, ரோச் பூங்கா, திருச்செந்தூர் ரோடு, ஜார்ஜ் ரோடு, மார்க்கெட் பகுதிகளில் நடை பயிற்சி சென்றவர்களும் தொண்டை வலி, தொடர் இருமலால் அவதிப்பட்டனர். சிப்காட் பகுதியில் இருந்து விஷவாயு பரவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்ததை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை அளித்தனர்.

இதற்கிடையில், விஷவாயு கசிவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை கடந்த 25ம் தேதி மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது 200 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடந்த 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தை வைகோ அறவித்திருந்தார். அன்று வைகோ தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மீனவர் அமைப்பினர் உள்ளிட்ட ஆயிரக்ணக்கானோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தூத்துக்குடி வருவாய்த் துறை அலுவலர்களும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்த ஆலையின் வாசலில் இன்று காலை 10 மணிக்கு ஒட்டினர். இதையடுத்து அந்த ஆலைக்கு மின் சப்ளை மற்றும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் உறுதி:

தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் கூறியதாவது:

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேறியது உறுதி செய்யப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக அந்த வாயு வெளியேற்றப்பட்டதன் மூலம் விதிமீறல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கை சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைத்தோம். மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மின்வாரியம் ஆகியவை இணைந்து இதனை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முழுமையாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு

தூத்துக்குடியில் 1992ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில் தனியார் ஓட்டலில் ஒரு தளத்தில் இயங்கிய ஸ்டெர்லைட் நிர்வாக அலுவலகம் 1995ம் ஆண்டில் இருந்து ரூ.1500 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிப்காட்டுக்கு இடம் பெயர்ந்தது. அந்த ஆண்டிலேயே ஆலையில் உற்பத்தி தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடக்கத்தில் இருந்தே தூத்துக்குடி மக்களிடையே குறிப்பாக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 1997ம் ஆண்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த ஆலையை எதிர்த்து நடைபயணம் சென்றார். பின்னர் இந்த ஆலையை மூடக் கோரி சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

1600 கோடி வருவாய் இழப்பு:

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இங்கு தாமிரம், காப்பர் கேதோடு, பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக், ஜிப்சம், பெர்ரோசாண்ட் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் நேரடியாக 6,000 தொழிலாளிகளும், மறைமுகமாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூலம் அரசுக்கு ஆண்டு வரி வருவாய் ரூ.1600 கோடி கிடைத்தது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஆலையில் இருந்து பொருட்களை எடுத்து செல்ல 600 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி பொருட்களை நம்பி தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட சிறிய துணை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

No comments:

Post a Comment