Wednesday, March 27, 2013
வாஷிங்டன்::அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படை இயக்குனராக
ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை ஒபாமா நியமித்துள்ளார். இப்பொறுப்பில் பெண் நியமிக்கப்படுவது இது முதல்முறை. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் கீழ் உள்ளது சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் பாதுகாப்பு ஏஜென்சி. அதிபருக்கு, அதிபர் குடும்பத்துக்கு, முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது இவர்களது முக்கிய பணி. இந்த ஏஜென்சியின் தலைமை இயக்குனராக சீனியர் பெண் அதிகாரி ஜூலியா பியர்சன் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஜூலியா 1983-ல் சிறப்பு ஏஜென்டாக பணியை துவக்கியவர். அதிபர் பாதுகாப்பு பிரிவில் இருந்துள்ளார். துணை இயக்குனர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
அதிபர் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இது முதல் முறை. அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு ஏப்ரலில் தென்அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றிருந்தார். அப்போது அதிபர் பாதுகாப்புக்கு சென்றிருந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சிலர் பாலியல் தொழிலாளிகளை தங்களது ஓட்டல் அறைகளுக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலமானது. இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு துறை இயக்குனர் மார்க் சுல்லிவன்தான் பொறுப்பு என்றும் கூறப்பட்டது. இயக்குனர் பொறுப்பில் 7 ஆண்டு காலம் இருந்த மார்க் சுல்லிவன் கடந்த மாதம் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment