Thursday, March 7, 2013

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறுவது உறுதி -ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, March 07, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பதில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமண்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் மாநாடு நிச்சயமாக இலங்கையில் நடைபெறும். பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட மாட்டாது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அது குறித்து அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழுவின் இலங்கை விடயத்தை ஒரு அங்கமாக உள்ளடக்க முடியாது. இதற்கான தேவையெதுவும் இல்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இலங்கையின் செயற்பாடுகள் சிறப்பான முறையில் இருப்பதாகக் கூறிச் சென்றிருந்தார்.

கடந்த ஆறு மாதங்களில் இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது என கமலேஷ் ஷர்மா கூறியிருந்தார். குறிப்பாக சமாதானம், நல்லிணக்கம், தொழில் வாய்ப்புகளின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல துறைகளில் இலங்கை ஸ்திரமான நிலையில் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது மட்டுமன்றி 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக உள்ளதுடன், துரிதகதியில் அவை முன்னெடுக்கப்படுவதாகவும் கமலேஷ் ஷர்மா கூறியிருந்தார்.

இந்த நிலையில் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழுவில் இலங்கையை ஒரு விடயமாக உள்ளடக்குவதற்கான எந்தவொரு தேவையும் இல்லை. இலங்கையின் செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை வரவேற்றிருந்த கமலேஷ் ஷர்மா, தேர்தல் நிறுவனங்கள், மனித உரிமை நிலைமை, நல்லிணக்கம், நீதித்துறை, சுயாதீன ஊடகம் உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயாரென்றும் கூறியிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக் கூடாது என்பதை ஏற்க முடியாது. 2011 ஆம் ஆண்டு பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டதுக்கமைய இவ்வருடம் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment