Thursday, March 07, 2013
இலங்கை::முல்லைத்தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கேப்பாபுலவு மீள்குடியேற்ற கிராமத்திற்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
கேப்பாபுலவு பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள தமிழ் குடும்பங்களுடன் நேரடியாக கலந்துரையாடிய இராணுவத் தளபதி, குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இராணுவத்தின் உதவியுடன் அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடுகளையும் நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். கேப்பாபுலவு மாதிரி கிராமத்தில் இராணுவத்தின் உதவியுடன் சுமார் 165 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 50 வீடுகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்டு தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியில் இராணுவத்தின் 592 வது படையணியின் உதவியுடன் 40 வீடுகள் நந்திக் கடல் களப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த 40 வீடுகளும் நந்திக்கடல் களப்பு பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீள்குடியமர்த்தப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இம்மாதம் 16ம் திகதி கையளிக்கப்படவுள்ளன.
கேப்பாபுலவு மற்றும் நந்திக்கடல் களப்பு பிரதேச வீடமைப்பு திட்டங்களை நேரில் பார்வையிட்ட இராணுவத் தளபதி அதனை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் படையினருக்கு இதன்போது வழங்கினார்.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் இராணுவத்தினர் வழங்கும் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினருக்கு முழுமையான அளவு தெரியவில்லை என்று தான் நம்புவதாக அங்கு தெரிவித்த இராணுவத் தளபதி, இது கவலைக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார். கேப்பாபுலவு போன்ற பல்வேறு சமூக, நலன்புரி சேவைகளை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்ளப் படும் திட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்வதில்லை. நாட்டின் தேசிய அக்கறையை, பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும் இராணுவத் தளபதி இங்கு விளக்கமளித்துள்ளார்.
மோதலுக்கு பின்னர் இடம்பெறும் சமூக, நலன்புரி நடவடிக்கைகளில் இராணுவத்தினர் உட்சாகமாக ஈடுபடுவதை உலகின் எந்த பாகத்திலும் காண முடியும். அதேபோன்றே இலங்கை இராணுவத்தினரும் செயற்படுகின்றனர்.
மீள்நிர்மாணம், மீள்குடியேற்றம், மீள்புனரமைப்பு, மீள் நல்லிணக்கம், மீள் ஒருங்கிணைப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், வீடமைப்புத் திட்டம் போன்ற சமூக நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உட்சாகத்துடன் மேற்கொண்டு வருகிறது என்றும் இராணுவத் தளபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
.jpg)



No comments:
Post a Comment