Friday, March 15, 2013

அனைத்து கட்சி பேரணியில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு:-இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து மாணவர் போராட்டம் வலுக்கிறது!

Friday, March 15, 2013
சென்னை::திருக்கழுக்குன்றத்தில் அனைத்து கட்சி பேரணியில் திடீரென இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருக்கழுக்குன்றத்தில் இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சிகள், இயக்கங்கள், வியாபாரிகள், மாணவர்கள் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, மேட்டுத் தெரு, பஜார் வீதி வழியாக பஸ் நிலையம் சென்றது. இதில் சுமார் 1500 பேர் பங்கேற்றனர். அவர்கள் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர். சினிமா இயக்குனர் கவுதமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பஸ் நிலையத்தில் அவர் பேசுகையில், ‘‘ஈழத் தமிழருக்காக போராடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை கூட விட்டு வைக்காமல் ராஜபக்சே அரசு கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளது. அப்படியானால் சாதாரண மக்களை எப்படி கொன்று இருப்பார்கள் என்று எண்ணி பாருங்கள்.

காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி உள்ளன. இது மற்ற இடங்களிலும் நடைபெற வேண்டும். இது போன்ற எழுச்சி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும். அதற்கு திருக்கழுக்குன்றத்தில் நடக்கும் இந்த பேரணி ஒரு சான்றாக இருக்க வேண்டும்’’ என்றார். பேரணி முடிவில் பஸ் நிலையத்தில் திடீரென சிலர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஈழத் தமிழர்களுக்கு தனி மாகாணம் அமைக்க கோரியும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து சுதந்திரமாக வாழ வழிசெய்ய வேண்டும், ஐ.நா.சபையில் இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து மாணவர் போராட்டம் வலுக்கிறது!

சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்லூரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 4வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். புதுக்கல்லூரி மாணவர்கள் 24 பேர் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் 100 பேர் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாநில கல்லூரி மாணவர்கள் 200 பேர் கல்லூரி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெயின் கல்லூரி, குருநானக் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். பல கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தி வருவதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பி சமூக விரோத கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி வளாகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்
டுள்ளது.

சென்னையில் 4 கல்லூரிகளில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் : உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு!

சென்னை::சென்னையில் 4 கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இலங்கை போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் உண்ணாரவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பின் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

ஆனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதேபோல், சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியிலும், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர்களும், புதுக்கல்லூரி மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து அவர்கள் இலங்கைக்கு எதிராகவும், ராஜபக்சேக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் மாநில கல்லூரி மாணவர்களும் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment