Saturday, March 23, 2013

ராஜதந்திர தளர்வு நிலை குறித்து விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

Saturday, March 23, 2013
இலங்கை::அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட யோசனையானது ஜெனிவா மனித உரிமை பேரவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட ராஜதந்திர தளர்வு நிலை குறித்து உடனடியான விசாரணைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் பல மாநில அரசாங்கங்கள் இலங்கைக்கு சார்பாக இருக்கும் நிலையில்,தமிழ் நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய அரசாங்கம் அடிப்பணிந்தமை, இலங்கையின் ராஜதந்திர அதிகாரிகளின் பலவீனம் என அரசாங்கத்தில் உள்ள சிலர் கருதுகின்றனர். இலங்கை, இந்திய மாநில அரசுகளுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்தால், அதன் ஊடாக சாதமான நிலைமையை ஏற்படுத்த வாய்ப்பிருந்திருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த முறை இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஜப்பான், இம்முறை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனையும் இலங்கை உரிய முறையில் பயன்படுத்த தவறி விட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இலங்கைக்கு ராஜதந்திர சாதகங்கள் அன்றி நாடுகளுக்கான விஜயங்களை மேற்கொள்ள அதிக பணத்தை செலவிட்ட போதிலும், இலங்கைக்கு ராஜதந்திர ரீதியில் நெருக்கமான நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த தவறியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தோல்வியடைந்தமை குறித்து உயர்மட்டத் தலைவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment