புதுடெல்லி::எந்த நாட்டு விவகாரத்திலும் பெரியண்ணன் மாதிரியும் உலக போலீஸ்காரன் போலவும் இந்தியா நடந்து கொள்வதில்லை என மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: எந்த நாட்டு விவகாரத்திலும், உலக போலீஸ்காரன் மாதிரியோ, பெரியண்ணன் போலவோ இந்தியா நடந்து கொள்வதில்லை.
இலங்கை தமிழர்களின் நிலை பற்றி உறுப்பினர்கள் தெரிவித்த உணர்வுகள், கவலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஐ.நா. தீர்மானத்தின் போது அரசு முடிவெடுக்கும். எதிர்கட்சி தலைவர் பேசும்போது, ‘‘இலங்கையில் நடந்ததை ஆய்வு செய்து, அதற்கு இலங்கை என்ன சொல்கிறது, மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன என்பதை பார்த்து சிறந்த முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.
நாம் எடுக்கும் முடிவு வலுவானதாக இருக்க வேண்டும். அரைகுறையாக இருக்க கூடாது. நாம் செய்வது நியாயமாக இருக்க வேண்டும். அதை எப்படி செய்வது, என்ன செய்வது என்ற முடிவை அரசிடம் விட்டு விட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சுதந்திரமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணை தேவை என்பதை இந்தியா வலியுறுத்தும். அப்போதுதான் 27 ஆண்டு கால பிரச்னைக்கு முடிவு ஏற்படும். எல்லா நாடும் நமது நட்பு நாடு அல்ல என்பதால், நாம் எடுக்கும் முடிவு, எதிர்காலத்தில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்திய அரசு கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

No comments:
Post a Comment