Sunday, March 10, 2013

புஸ்வாணம்' ஆன டில்லி டெசோ' மாநாடு: தி.மு.க., "பந்த்' நடக்குமா?.

Sunday, March 10, 2013
டில்லியில் நடத்தி முடிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட, 40 அரசியல் கட்சி தலைவர்களில், ஏழு பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ஜ., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்ததால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, "அப்செட்' அடைந்துள்ளார்.

மாநாட்டில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றாததால், மாநாடு புஸ்வாணமாகியுள்ளது. இதன் எதிரொலியாக, இம்மாதம், 12ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த, "பந்த்' போராட்டம் ரத்து செய்யப்பட்டு, அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லியில் நடந்த, "டெசோ' மாநாட்டில், அத்வானி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், பிரகாஷ்சிங் பாதல், பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு உட்பட, 40 தலைவர்கள் மற்றும் பல கட்சிகளின் எம்.பி.,க்கள் என, மொத்தம், 250 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதில், ஏழு தலைவர்கள் உட்பட மொத்தமே, 32 பேர் மட்டும் கலந்து கொண்டதால், தி.மு.க., தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மாநாட்டை ஏற்பாடு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், "டோஸ்' விடுத்துள்ளார்.

தி.மு.க.,வினர் ஆறுதல் அடையும் வகையில், காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள், மாநாட்டில் பங்கேற்பதற்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், "மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது' என, சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால், தேசிய அளவில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, "டெசோ' மாநாடு, "புஸ்வாணம்' ஆகியுள்ளது. "டெசோ' மாநாட்டின் தோல்வி எதிரொலியால், இம்மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ள, "பந்த்' போராட்டம் ரத்து செய்யப்பட்டு, அன்றயை தினம், "டெசோ' மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்த, தி.மு.க., ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:"டெசோ' மாநாடு, 5:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முக்கிய தலைவர்கள் யாரும் வரவில்லை. டி.ஆர்.பாலுவிடம், கனிமொழி, "யாருமே இன்னும் வரவில்லையே' எனக் கேட்டுள்ளார். அதற்கு டி.ஆர்.பாலு, "எல்லாரும் வருவார்கள்' எனக் கூறினார். அரங்கத்தில் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில், முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் யாருமே வரவில்லை.

குலாம்நபி ஆசாத் தன் பேச்சை ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு பறந்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியாவும் சில நிமிடங்களே இருந்தார். கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.பி.,க்களின் ஆங்கில உரை குறிப்பிடும்படி அமைந்துள்ளது. தி.மு.க., எம்.பி.,க்கள், டில்லி தலைவர்களிடம் முறையான அனுமதி பெறாத காரணத்தினால், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.மதுரையில், 1986ல் நடந்த, "டெசோ' மாநாட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு அம்மாநாட்டை வெற்றி பெற வைத்தனர்.

ஆனால், டில்லி மாநாட்டை தி.மு.க., எம்.பி.,க்கள் திட்டமிட்டு நடத்தாமல், "கோட்டை' விட்டு விட்டனர். பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தி.மு.க., எம்.பி.,க்கள் பேசுகையில், பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்தும், ராஜபக்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என, குறிப்பிடவில்லை.

மாறாக, "போருக்கு பின் கற்றுக் கொண்ட பாடங்களும், படிப்பினைகளும்' என்ற அறிக்கையை மையப்படுத்தி பேசியது, இலங்கை அரசுக்கு சாதகமாகத்தான் அமையும் என, இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், டில்லி "டெசோ' மாநாடு, இலங்கை தமிழர்களை ஏமாற்றும் நாடகமாகத்தான் அமைந்துள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment